UPDATED : ஆக 11, 2025 12:29 PM
ADDED : ஆக 11, 2025 04:14 AM
டூவீலர் திருட்டு
தேனி: மதுராபுரி விநாயகர் கோயில் தெரு சதீஸ்குமார் 33. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் அப்பகுதியில் மீனாட்சிபுரம் செல்லும் ரோட்டில், அவரது டூவீலரை நிறுத்தி இருந்தார். சொந்த வேலையாக சென்றவர், மீண்டும் வந்த போது டூவீலர் திருடு போயிருந்தது. சதீஸ்குமார் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
நாய்கடித்து சிறுமி காயம்
தேனி: பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய சிவா தெரு கவிதா. இவரது மகள் அனுஷ்கா. அதே பகுதியில் விமலா, காளீஸ்வரி, சரண்யா ஆகியோர் கடை வைத்துள்ளனர். அந்த கடைக்கு பொருட்கள் வாங்க சிறுமி அனுஷ்கா சென்றார். கடைகாரர்கள் வளர்த்த நாய், சிறுமியை கடித்தது. இதுபற்றி கடைக்காரர்களிடம் சிறுமியின் தாத்தா ஆண்டிசாமி கேட்ட போது, 'நாய் அப்படித்தான் கடிக்கும்' என தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டல் விடுத்தனர். ஆண்டிசாமி புகாரில் விமலா, காளீஸ்வரி, சரண்யா மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.
புகையிலை விற்ற பெண் கைது
தேனி: போலீசார் நாகலாபுரம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் செல்வராணி 38, என்பவரது கடையில் சோதனை செய்த போது ரூ.14 ஆயிரம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர். செல்வியை கைது செய்து விசாரிக்கின்றனர்.
சமையல் தொழிலாளி மாயம்
தேனி: அல்லிநகரம் மாரிச்சாமி 26. இவர் கேரளாவிற்கு சமையல் வேலைக்கு செல்வதாகக் கூறி ஜூலை 10ல் வீட்டில் இருந்து சென்றார். 25 நாட்களுக்கு மேலான நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது மனைவி சரண்யா புகாரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்திக்குத்து
தேனி: வீரபாண்டி பட்டாளம்மன் கோயில் தெரு சங்கரன் 30. இவரது வீடு முன் உறவினர் தங்கப்பாண்டி என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார். இதனை சங்கரன் தட்டி கேட்டார். அதற்கு என் கொளுந்தியாளுக்கு மாப்பிளை பார்க்க நீங்க யாருடா என கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை சங்கரன் தலையில் குத்தி, கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்தவர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டார். சங்கரன் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் விபத்தில் மோதி ஒருவர் காயம் தேனி: பெரியகுளம் ஏ.வாடிப்பட்டி வீரணன் 40. தனியார் நிறுவன ஊழியர். இவர் வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பினார். தர்மலிங்கபுரம் அருகே சென்ற போது, அவருக்கு பின் மற்றொரு டூவீலரில் வந்தவர், வீரணன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து நடந்தது. இதில் காயமடைந்த வீரணன் வத்தலக்குண்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது வாக்குமூலம் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தேங்காய் உரிக்கும் தொழிலாளிக்கு வெட்டு
தேனி: ஜி.கல்லுப்பட்டி ரைஸ்மில் தெரு பெருமாள்பிரபு 24. அதே பகுதியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனைவியுடன் பெருமாள் பிரபு பழகியதால் முன்விரோதம் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் அதே பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே சென்ற பெருமாள் பிரபுவை, முருகவேல் அரிவாளால் வெட்டினார். அங்கிருந்து பெருமாள்பிரபு தப்பி வீட்டிற்குள் ஓடினார். அங்கிருந்தவர்கள் சத்தமிட்டதால் முருகவேல் கொலை மிரட்டல் விடுத்து, தப்பிச் சென்றார். காயமடைந்த பெருமாள்பிரபு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாதிக்கப்பட்டவர் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.