ADDED : பிப் 16, 2024 06:26 AM
வேன் --- லாரி மோதலில் 7 பேர் காயம்
தேனி: கோட்டூர் காளியம்மன் கோயில் தெரு ஆட்டோ டிரைவர் நல்லவன் 46. இவர் பிப். 14ல் இரவு அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். கர்நாடகா, மாண்டியா மாவட்டம் டிரைவர் சிவக்குமார் 40, ஓட்டி வந்த டிராவலர்ஸ் வேன் தேனி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயில் தெரு பாண்டியன் பழனிச்சாமி 61, ஓட்டி வந்த லாரி, டிராவலர்ஸ் வேன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராவலர்ஸ் வேன் டிரைவர் சிவக்குமார், வேனில் பயணித்த 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன. ஆட்டோ டிரைவர் நல்லவன் புகாரில் வீரபாண்டி போலீசார் லாரி டிரைவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். டிராவலர்ஸ் வேனில் பயணித்த 6 பேர், டிரைவர் உட்பட தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்று கர்நாடகா சென்றனர்.
வேலை வாங்கித்தருவதாக பணம்
வாங்கி ஏமாற்றியவர் மீது வழக்கு
ஆண்டிபட்டி: பெரியகுளம் அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் செல்லத்துரை 63, இவரிடம் ஆண்டிபட்டி கொண்டநாயக்கன்பட்டியை சேர்ந்த குமரேசன் என்பவர், எஸ்.பி.ஐ.,வங்கியில் செல்லத்துரை மருமகள் வனிதாவுக்கு கிளார்க் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாங்கிக் கொண்டு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி விட்டார். பணத்தை பலமுறை கேட்டும் திரும்ப தரவில்லை. இதே போல் இன்னும் சிலரையும் ஏமாற்றி உள்ளார். செல்லத்துரை கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ.,வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
பெண்களை மிரட்டியவர் கைது
கடமலைக்குண்டு:- கண்டமனூர் ராஜேந்திரா நகரைச்சேர்ந்தவர் ஈஸ்வரி 24, இதே பகுதியை சேர்ந்த சிவா 26, மூன்று நாட்களுக்கு முன்பு வீட்டில் குளித்துக் கொண்டிருந்த ஈஸ்வரியை தவறான எண்ணத்துடன் சிவா எட்டிப்பார்த்துள்ளார். இதனை ஈஸ்வரி மற்றும் அப்பகுதியில் உள்ள பாக்கியலட்சுமி இருவரும் கண்டித்துள்ளனர். இதை மனதில் வைத்துக் கொண்டு நேற்று முன்தினம் சிவா, ஈஸ்வரி பாக்கியலட்சுமி இருவரையும் கொன்று விடுவேன் என்று கட்டையை காட்டி மிரட்டி உள்ளார். ஈஸ்வரி புகாரில் கண்டனூர் எஸ்.ஐ., செல்லபாண்டியன் சிவாவை கைது செய்தார்.
பெண்ணை தாக்கியவர்கள் மீது வழக்கு
ஆண்டிபட்டி: பாப்பம்பாள்புரத்தைச் சேர்ந்தவர் கஸ்தூரி 42, இவரது கணவர் குமரேசன், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இது தொடர்பான வழக்கும் உள்ளது. இந்நிலையில் முன் பகையை மனதில் வைத்துக் கொண்டு கணவர் குமரேசன் மற்றும் உறவினர்கள் ரகுராமன், கவிதா, ராஜா, ரமேஷ்பாபு ஆகியோர் கஸ்தூரி வீட்டிற்கு சென்று அவருடன் தகராறு செய்து கழுத்தில் இருந்த நகையை பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். காயமடைந்த கஸ்தூரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கஸ்தூரி கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., பன்னீர்செல்வன் பெண்ணை தாக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மாணவி தற்கொலை
கூடலுார்:-கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த பேயத்தேவனின் மகள் மதுமிதா 16. அங்குள்ள கள்ளர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று மாலை வீட்டிற்குள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். கூடலுார் இன்ஸ்பெக்டர் பிச்சைப் பாண்டியன் விசாரித்து வருகிறார்.
பேரிகார்டில் மோதி ஒருவர் பலி
போடி: வடக்குப்பட்டி அழகர்சாமி கோயில் தெரு ராம்குமார் 24. இவரது சித்தப்பா விஜய் கிறிஸ்டோபர் 46. இவர் ராம்குமாரை தனது டூவீலரில் ஏற்றில் கொண்டு கம்பம் தேனி மெயின் ரோட்டில் சென்றார். பின், டூவீலரை வேகமாக ஓட்டி பழனிசெட்டிபட்டி சோதனை சாவடி அருகே இருந்த இரும்பு பேரிகார்டு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜய் கிறிஸ்டோபர் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி கொண்டு சென்று இறந்தார். ராம்குமாருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
தேனி: போடி பத்ரகாளிபுரம் இந்திராகாலனி தமிழ்செல்வி 42. இவரது கணவர் மதுரைவீரன் 45. கணவர் தினமும் மது குடித்துவிட்டு, மனைவியை தாக்கியுள்ளார். பிப். 11ல் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். தரமறுத்த மனைவியை துடப்பத்தால் தாக்கியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மனைவி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பழனிச்செட்டிபட்டி போலீசார், மனைவி புகாரில் கணவர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
டி.வி., பணம் திருட்டு
தேனி: பூதிப்புரம் வசந்தம் நகர் பாரதிராஜன் 30. ராணுவ வீரர். விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர் பிப்., 6ல் காலை மீண்டும் பணிக்கு சென்றார். அன்று வீட்டை பூட்டிய ராணுவ வீரரின் மனைவி வைத்தீஸ்வரி 28, குழந்தைகளுடன் தனது தாய் வீடு உள்ள ஆனைமலையான்பட்டிக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்து, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள எல்.சி.டி., டி.வி., பணம் ரூ.8 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட வைதீஸ்வரி புகாரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.