ADDED : ஜூன் 09, 2025 02:46 AM
விபத்தில் மூவர் காயம்
தேனி: பெரியகுளம் தெய்வேந்திரபுரம் ஆட்டோ டிரைவர் விஜயகுமார் 35. இவர் கோட்டூரில் பயணிகளை இறக்கிவிட்டு திண்டுக்கல் குமுளி ரோட்டில் வந்தார். ஆதிப்பட்டி மேம்பாலம் அருகே சர்வீஸ் ரோட்டில் ஆட்டோவை திருப்பினார். அப்போது அவருக்குப் பின்னால் சென்னை மடிப்பாக்கம் விக்னேஷ்குமார் ஓட்டி வந்த கார், ஆட்டோ மீது மோதி விபத்து நடந்தது. இதில் ஆட்டோ டிரைவர், கார் டிரைவர், அவரது மனைவி சித்ரா ஆகிய மூவரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவி மாயம்
தேனி: சிவலிங்கநாயக்கன்பட்டி ராஜ்குமார். இவரது 19 வயது மகள் தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார். வீட்டில் இருந்து மகள் மாயமானார். எங்கு தேடியும் கிடைக்க வில்லை. தந்தை புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலர் திருட்டு
பெரியகுளம்: டி.கள்ளிப்பட்டி முத்துராமலிங்கம் தெரு ராஜா 37. லட்சுமிபுரத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். ஊருக்கு ஒதுக்குப்புறம் சிறுநீர் கழிக்கச் சென்றார். சிறிது நேரத்தில் சாவியுடன் நிறுத்தியிருந்த டூவீலர், அதில் வைத்திருந்த அலைபேசி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வைத்திருந்தவர் கைது
பெரியகுளம்: எ.புதுக்கோட்டை மலையாண்டி தெரு ஹரிகிருஷ்ணன் 20. இவர் சட்டவிரோத விற்பனைக்காக 24 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தார். வடகரை எஸ்.ஐ., விக்னேஷ், கஞ்சாவை கைப்பற்றி, ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர்.
கொலை மிரட்டல்: இருவர் கைது
பெரியகுளம்: வடுகபட்டி வள்ளுவர் தெரு ராமகிருஷ்ணன் 28. இவரது தம்பி தினேஷ்குமார் 26. இருவரும் வத்தலக்குண்டு காய்கறி கமிஷன் மண்டி வளாகத்தில் கடை வைத்துள்ளனர். இவர்களிடம் தென்கரை காய்கறி மார்க்கெட் வியாபாரி முகமது முத்தலிபு 30, ரூ.10 ஆயிரத்துக்கு காய்கறிகள் வாங்கியுள்ளார். பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என முகமது முத்தலிப்பை அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். தென்கரை போலீசார் ராமகிருஷ்ணன், தினேஷ்குமாரை கைது செய்தனர்.
ஆற்றில் இழுத்து செல்லப்பட்ட
பெண் பலி
தேனி: உத்தமபாளையம் கன்னிசேர்வைபட்டி பழனிசாமி 50. பலசரக்குகடை உரிமையாளர். இவரது மனைவி லீலா. இவர்களது இளைய மகன் திருமணம் ஜூன் 5ல் வீரபாண்டியில் நடந்தது. விழாவிற்கு வந்த உறவினர்கள் ஆற்றில் குளிக்க வேண்டும் என கூறியிருந்தனர். இதனால் நேற்று முன்தினம் கன்னிசேர்வைபட்டியில் இருந்து உறவினர்களுடன் குளிக்க வீரபாண்டி வந்தார். பழனிசாமி கரையில் அமர்ந்திருந்தார். குளிக்க சென்றவர்கள் கரை ஏறிய போது லீலா தண்ணீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற பழனிசாமி ஆற்றில் இறங்கினார். அவரையும் தண்ணீர் இழுத்து சென்றது. மனைவியுடன் கரையேறினார். லீலாவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பழனிசாமி புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பெட்ரோல் பங்க் மேலாளர் தாக்குதல்
தேவதானப்பட்டி: பெரியகுளம் தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு அருகே தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது. நம்பர் பிளேட் இல்லாத கார்களில் வந்தவர்கள் பெட்ரோல் நிரப்பக் கூறினர். பம்ப் வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த இரு காரில் வந்த 12 பேர், பெட்ரோல் பங்க் மேலாளர் சண்முகத்தை தாக்கி தப்பி சென்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம் பெண் மாயம்
ஆண்டிபட்டி: ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மனைவி புவனேஸ்வரி 29. இவரது பெற்றோர் கேரளாவில் வசித்து, கூலி வேலை செய்கின்றனர். புவனேஸ்வரியின் தங்கை யோகஸ்ரீதேவி 23, உடல்நலம் பாதித்ததால் கடந்த ஒரு மாதமாக ரெங்கசமுத்திரத்தில், தனது அக்கா வீட்டில் தங்கி இருந்தார். நான்கு நாட்களுக்கு முன் புவனேஸ்வரி கணவருடன் சொந்த வேலையாக வெளியே சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்த போது யோகஸ்ரீதேவி வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும், உறவினரிடம் விசாரித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்ற இருவர் கைது
ஆண்டிபட்டி: அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள பெட்டிக் கடையில் ஆண்டிபட்டி போலீசார் சோதனை செய்தனர். பெட்டிக்கடையில் ரூ.7000 மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்த ஆண்டிபட்டி பாலசுப்பிரமணியன் 41, ராஜா 54, ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து பாலசுப்ரமணியனை கைது செய்தனர்.
கண்டமனுார்: போலீசார் வாகன சோதனையில் இருந்த போது எரதிமக்காள்பட்டி பஸ் ஸ்டாப் அருகே சந்தேகப்படும்படி சென்ற ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் ரூ.17 ஆயிரம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தன. புகையிலை பாக்கெட்டுகளை கடைகளில் விற்பனை செய்வதற்காக பதுக்கி, கொண்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து ரோசனப்பட்டி திலிப்குமாரை 23, கைது செய்த போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.