4 கிலோ கஞ்சா: இருவர் கைது
கம்பம்: கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த தகவலின்பேரில் வடக்கு எஸ்.ஐ. நாகராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கம்பமெட்டு ரோட்டில் நாக கன்னியம்மன் கோயில் அருகில் சாக்கு பையுடன் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் 4 கிலோ கஞ்சா இருந்ததை பறிமுதல் செய்தனர். விசாரணையில் உலகத்தேவர் தெருவை சேர்ந்த சாந்தி 50, கோ சேந்திர ஓடையை சேர்ந்த செல்வம் 45,ஆகிய இருவரும் கைது செய்து கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
இளைஞர் தற்கொலை -
போடி: பெருமாள் கவுண்டன் பட்டியை சேர்ந்தவர் ஞானசேகரன் 26. இவரது தாயார் ஞானமணி. இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மனம் உடைந்த ஞானசேகரன் தினமும் மது குடித்து வந்துள்ளார். நேற்று வீட்டில் ஆட்கள் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஞானசேகரன் தம்பி சக்தி மணிகண்டன் புகாரில் போடி தாலுாகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மாணவி தற்கொலை
மூணாறு: இடுக்கி மாவட்டம், காஞ்சியாறு அருகே பிளஸ் 1 படிப்புக்கு பள்ளியில் இட ஒதுக்கீடு கிடைக்காத விரக்தியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காஞ்சியாறு அருகே காக்காட்டுகடை பகுதியைச் சேர்ந்தவர் உதயன் மகள் ஸ்ரீபார்வதி 16. இவர் வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கிடந்தார். காஞ்சியாறு போலீசார் விசாரித்தனர். இதில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஸ்ரீ பார்வதி 'ஆன் லைன்' வாயிலாக பிளஸ் 1க்கு விண்ணப்பித்து இட ஒதுக்கீடுக்கு காத்திருந்தார். இட ஒதுக்கீடு கிடைக்காததால் விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.
மண் திருட்டு: டிராக்டர்கள் பறிமுதல்
போடி: எரணம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் சந்திரபோஸ், பழனிச்செல்வம், இருவரும் நேற்று அரசு அனுமதி இன்றி எரணம்பட்டி கிழக்கே உள்ள கண்மாயில் 2 டிராக்டரில் மண் அள்ளி கடத்த முயன்றுள்னர். போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடி உள்ளனர். போடி தாலுகா போலீசார் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சந்திரபோஸ், பழனிச் செல்வத்தை தேடி வருகின்றனர்.
மூதாட்டிக்கு அரிவாள் வெட்டுதாய், மகன் மீது வழக்கு
தேனி: உப்புக்கோட்டை காமாட்சியம்மன் கோயில் நடுத்தெரு மூதாட்டி காளியம்மாள் 85. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் 30 அவரது தாய் தங்கராணிக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்தது. தாய்,மகன் இருவரும் காளியம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, காளியம்மாள் மகன் வீட்டில் அத்து மீறி நுழைந்து அரிவாளால் வெட்ட முயன்றபோது, காளியம்மாள் கையால் தடுத்ததால் காயங்கள் ஏற்பட்டன. கொலை மிரட்டல் விடுத்தனர். காளியம்மாள் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வீரபாண்டி போலீசார் முத்துக்கிருஷ்ணன், அவரது தாய் தங்கராணி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
குழாயடி சண்டையில் தங்கச்செயின் மாயம்: ஏழு பேர் மீது வழக்கு
தேனி: பழனிசெட்டிபட்டி ஜவஹர் நகர் நாகஜோதி 36. இவரது தாயார் ராணி 55. இவர் மே 30ல் வீட்டின் முன்பிருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். இதில் ராணிக்கும், அதேபகுதி தீபாவிற்கும் தகராறு ஏற்பட்டது. இதனை கேள்விப்பட்ட தீபாவின் தாய் செல்வி,தந்தை முருகேசன், சகோதரி தீபிகா, உறவினர்கள் கமலா, இந்து, நிசா ஆகிய 7 பேர் தகராறில் ஈடுபட்டனர். ராணியை கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். தகராறை விலக்கிவிட சென்ற நாகஜோதியையும் தாக்கினர். இந்த சண்டையில் தான் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை காணவில்லை என, நாகஜோதி பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் தீபா உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
அனுமதியின்றி எம்.சாண்ட் கடத்திய இருவர் கைது
சின்னமனூர்: மார்க்கையன் கோட்டை பைபாஸ் பிரிவில் சின்னமனுார் இன்ஸ்பெக்டர் பாலாண்டி வாகன சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது பதிவெண் இல்லாமல் வந்த டிராக்டரை சோதனை செய்தனர். உரிய அனுமதி சீட்டு இல்லாமல் எம். சாண்ட் மண் ஒரு யூனிட் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்து, ஓட்டி வந்த ஒத்த வீட்டை சேர்ந்த ஈஸ்வரன் 36, உரிமையாளர் சதீஸ்குமார் கைது செய்யப்பட்டனர்.