ADDED : ஜூலை 24, 2025 06:20 AM
கொலை மிரட்டல் நால்வர் மீது வழக்கு
தேனி: ஆதிபட்டி சாந்தா கோயில் தெரு மஞ்சு 30. இவருக்கும், பழனிசெட்டிபட்டி ஜவஹர்நகர் சிவக்குமார், கருப்புராஜா, தேவக்கனி, மணி உள்ளிட்டோருக்கு தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் இருந்து வந்தது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் மஞ்சு புகார் அளித்தார்.போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் சிவக்குமார், கருப்பசாமி, தேவக்கனி, மணி ஆகியோர் மஞ்சுவின் வீட்டில் அத்துமீறி நுழைந்து தாக்கி வழக்கை வாபஸ் வாங்க வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். சிவக்குமார் உட்பட நால்வர் மீதுபழனிசெட்டிபட்டி போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ரூ.15 லட்சம் மதிப்பிலான மின்சாதனங்கள் திருட்டு
தேனி: கொடுவிலார்பட்டி எலக்ட்ரானிக் சிட்டி ரமேஷ் 38. தனியார் காற்றாலை நிறுவனத்தின் உதவி மேலாளர். இவர், தனது நிறுவனம் மூலம் கோபாலபுரம் முதல் மூல வைகையாறு செல்லும் ரோட்டில் அமைக்கப்பட்ட காற்றாலையில் இருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள டிஸ்பிளே யூனிட்,லாஜிகேட் கண்ட்ரோலர், சி.சி.யு., என்ற மின்சாதனப் பொருட்கள் திருடி போயிருந்தன. உதவி மேலாளர் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மூதாட்டியிடம் செயின் பறிப்பு
கம்பம்: காந்தி நகரை சேர்ந்தவர் குலசம்மாள் 64, இவருடைய மகன் இதே ஊரில் வங்கி மேலாளராக உள்ளார். குலசம்மாள் நேற்று காலை தனது வீட்டின் முன்பு நடை பயிற்சி சென்றார். அப்போது டூ வீலரில் வந்த மர்ம நபர் ஒருவர் , குலசம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துள்ளார். குலசம்மாள் செயினை இறுக பற்றியுள்ளார். இதில் செயின் அறுந்து ஒரு பகுதி குலசம்மாள் கையிலும், ஒரு பகுதி தரையிலும், மற்றொரு பகுதி திருடன் கையிலும் சிக்கி கொண்டது. குலசம்மாள் சத்தம் போடவே, திருடன் டூவீலரில் தப்பியோடினான். புகாரின் பேரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மூதாட்டி மாயம்
தேவதானப்பட்டி: போடி எஸ்.எஸ்.புரம், ஆறுமுகம் சந்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி தமயந்தி 70. இவர் ஜி.கல்லுப்பட்டியில் தங்கை ராஜாத்தியம்மாளை பார்ப்பதற்கு ஜூலை 19ல் சென்றார். மறுநாள் ராஜாத்தியம்மாள், அக்காவை வீட்டில் தங்கவைத்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். வீடு திரும்பியபோது வீட்டில் தமயந்தியை காணவில்லை. தமயந்தி மகன் பாண்டியராஜன் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் தமயந்தியை தேடி வருகின்றனர்.