
எலக்ட்ரிக் கடை மேலாளர்
விபத்தில் பலி: இருவர் காயம்
கம்பம்: நாட்டுக்கல் தெருவில் உள்ள ஸ்டூடியோவில் வேலை பார்ப்பவர் மணிகண்டன் 26. கூடலூரை சேர்ந்த இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து, தனது டூவீலரில் கம்பத்தில் இருந்து கூடலுார் நோக்கிச் சென்றார் அவருக்கு முன்பு டூவீலரில் காந்திஜி வீதியில் எலக்ட்ரிக் கடை மேலாளராக பணியாற்றும் ஜெனித் 30, சென்று கொண்டிருந்தார்.
அப்போது கம்பம் காந்தி நகரை சேர்ந்த ராகுல் 21, கூடலூரில் இருந்து கம்பம் நோக்கி ஓட்டி வந்த டாடா சுமோ கார் தனியார் கல்லூரி அருகில் பிரேக் அடித்ததில், ஜெனித் ஒட்டி வந்த டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் ஜெனித் கீழே விழுந்தார். அவருக்கு பின்னால் டூவீலரில் வந்த மணிகண்டன் டூவீலர் மீது மோதி, மணிகண்டனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இந்த விபத்தில் மணிகண்டன், ஜெனித், காரில் பயணம் செய்த அவினாஷ் ஆகிய மூவருக்கும் காயங்கள் ஏற்பட்டன. மூவரும் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். பின் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில்- சேர்க்கப்பட்ட நிலையில், ஜெனித், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக்கின்றன.
பஸ் - டூவீலர் விபத்தில் ஒருவர் பலி
ஆண்டிபட்டி: வீருசின்னம்மாள்புரம் விக்னேஷ். இவரும், இவரது நண்பர் மரிக்குண்டை சேர்ந்த சுரேஷூம் 31, க.விலக்கில் இருந்து வீரு சின்னம்மாள்புரத்திற்கு டூவீலரில் சென்றனர். விக்னேஷ் டூவீலரை ஓட்டிச் சென்றார். க.விலக்கு வருஷநாடு மெயின் ரோட்டில் அரசு மாணவர் தங்கும் விடுதி அருகே முன்னால் சென்ற தனியார் பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டது. இதனால் பின்னால் சென்ற டூவீலர் பஸ்சில் மோதி விபத்து நடந்தது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த சுரேஷ், தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார். சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் பஸ் டிரைவர் மகேந்திரனிடம் விசாரிக்கின்றனர்.