அரிவாளால் தாக்கியதில் முதியவர் பலி : ஒருவர் கைது
தேவாரம்: மீனாட்சிபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முகமது சலீம் 75. கூலித் தொழிலாளி. இதே பகுதியை சேர்ந்தவர் ஜோதிராஜா 50. மாடு மேய்க்கும் தொழிலாளி. இருவரும் சேர்ந்து அடிக்கடி மது அருந்துவது வழக்கம். நேற்று இருவரும் மது அருந்தி உள்ளனர். இதில் மது பாட்டில் வாங்கி வருவது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த ஜோதிராஜா கையில் வைத்து இருந்த அரிவாளால் முகமது சலீம் தலையின் பின் பகுதியில் தாக்கி உள்ளார். இதில் முகமது சலீம் கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். தேவாரம் போலீசார் ஜோதி ராஜாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.
பெண்ணிற்கு இடையூறு வாலிபர் மீது வழக்கு
தேனி: அல்லிநகரம் 35 வயது பெண். இவர் திருமணம் முடித்து விவாகரத்து பெற்று பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அல்லிநகரம் வடக்குத்தெருவை சேர்ந்த அஜித்குமார், இரவில் வீட்டில் அத்துமீறி நுழைந்து துாங்கிக் கொண்டிருந்த 35 வயது பெண்ணிடம் இடையூறு செய்தார். பெண் கூச்சலிட்டு ஓடினார். பெண் புகாரில் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் அல்லிநகரம் போலீசார் அஜீத்குமார் மீது வழக்குப்பதிந்து, தேடி வருகினறனர். அஜீத்குமார் மீது அல்லிநகரம் போலீசில் 3 வழக்குகள் பதிவு செய்து, விசாரணை முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இளம் பெண் மாயம்
ஆண்டிப்பட்டி: க.விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் அருவராஜா 44, சமையல் மாஸ்டர் தொழில் செய்து வருகிறார். நான்கு நாட்களுக்கு முன் சமையல் வேலைக்காக மனைவி மற்றும் மகனுடன் அருவராஜா கன்னியப்பபிள்ளைபட்டி சென்றுள்ளார். அவரது மகள் கீர்த்திகா 20, மட்டும் வீட்டில் இருந்துள்ளார். சமையல் வேலை முடித்து திரும்ப வந்து பார்த்தபோது கீர்த்திகா வீட்டில் இல்லை. பல இடங்களில் தேடியும் உறவினரிடம் விசாரித்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அருவராஜா புகாரில் க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி திருமணம் 4 பேர் மீது வழக்கு
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பூர்த்தியடையாத சிறுமி. இவரை தேவதானப்பட்டியைச் சேர்ந்த கபிலேஸ்வரன் 25. திருமணம் செய்தார். இதற்குகபிலேஸ்வரன் தந்தை முருகன் 53. சிறுமியின் பெற்றோர்கள் வீரையா, லட்சுமி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். தற்போது சிறுமி 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். பெரியகுளம் ஒன்றிய ஊர்நல அலுவலர் விஜயலட்சுமி புகாரில், பெரியகுளம் அனைத்து மகளிர் போலீசார் கபிலேஸ்வரன் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கணவர் தற்கொலை மனைவி புகார்
ஆண்டிபட்டி: டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் 37, இவரது மனைவி செல்வி 37, எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்த இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இரு ஆண்டுக்கு முன் விபத்தில் காயம் அடைந்த பாலகிருஷ்ணன் மருத்துவ செலவிற்காக அவரது அண்ணனிடம் ரூ.50 ஆயிரம் கடன் பெற்றிருந்தார். இந்நிலையில் பாலகிருஷ்ணனுக்கு சேர வேண்டிய சொத்தை அவரது தாயார் தர மறுத்துள்ளார். இதனால் பாலகிருஷ்ணன் தனது தாயார் மற்றும் அண்ணனிடம் பேச்சுவார்த்தையின்றி இருந்தார். இந்நிலையில் மருத்துவ செலவிற்கு வாங்கிய கடனை அவரது அண்ணன் திருப்பி கேட்டுள்ளார். அதனை கொடுக்க முடியாமல் மனம் உடைந்த பாலகிருஷ்ணன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வி புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுபழக்கத்தால் வாலிபர் இறப்பு
பெரியகுளம்: தென்கரை தெற்குதெரு பாண்டியன் 32. எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். மது குடித்து விட்டு வீட்டில் சாப்பிட்டு, மாடியில் தூங்கச் சென்றார். இவரது தந்தை காமாட்சி காலையில் எழுப்பச்சென்றார். பாண்டியன் இறந்து கிடந்தார். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.