ADDED : செப் 17, 2025 07:45 AM
22 பட்டுச்சேலைகள் திருடிய பெண்கள்
தேனி: மதுரை பதஞ்சலி சில்க்ஸ் நிறுவனம் மாவட்டங்களில் பட்டுசேலை விற்பனை கண்காட்சி முகாம்கள் அமைத்துவிற்பனை செய்து வருகிறார். செப்.5ல் தேனி என்.ஆர்.டி., நகர் மெயின் ரோட்டில் உள்ள ஓட்டல் முதல் மாடியில் கண்காட்சி நடந்தது. அப்போது மாலை4:15 முதல் 4:45 மணிக்குள் பெண்கள் சிலர் ரூ.2.90 லட்சம் மதிப்புள்ள 22 பட்டுச் சேலைகளை திருடிச் சென்றுள்ளனர். பெண்கள் திருடிய சம்பவம் கண்காட்சி அரங்கில் இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பெண்களை கைது செய்து, சேலைகளை மீட்டுத்தர வேண்டும் என, நிறுவனர் சித்தரஞ்சன் தேனி போலீசில் புகார் அளித்தார். தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
அலைபேசிகள் திருடியவர் கைது
தேனி: அல்லிநகரம் காளீஸ்வரியம்மன் கோயில் தெரு சேகர் 65. இவர் செப்.14ல் தனது வீட்டின் வெளிப்புற கேட்டை பூட்டி, உள்ளே உள்ள கதவை பூட்டாமல் குடும்பத்தினருடன் துாங்கிக் கொண்டிருந்தார். செப்.15ல் அதிகாலை 3:30 மணியளவில் சேகரில் தலையணை அருகேயும், மனைவியின் தலையணை அருகே வைத்திருந்த ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள 2 அலைபேசிகளை திருடிக் கொண்டு ஒருவர் ஓடினார். அவர் அல்லிநகரம் ஹைஸ்கூல் தெருவை சேர்ந்த மணிகண்டன் என, அருகில் வசிப்பவர்களிடம் விசாரித்ததில் தெரிந்தது. புகாரில் வழக்குப்பதிந்து அல்லிநகரம்போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்
கடமலைக்குண்டு: கண்டமனூர் அருகே இரவில் மணல் திருடி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கண்டமனூர் எஸ்.ஐ. வேல்முருகன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். வேலாயுதபுரத்தில் இருந்து புதுக்குளம் செல்லும் மண் பாதையில் டிராக்டர், ஒரு யூனிட் மணலுடன் சென்றது. போலீசாரை கண்டதும் டிரைவர் டிராக்டரை நிறுத்திவிட்டு ஓடினார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் கண்டமனூரைச் சேர்ந்த சூரிய பிரகாஷ், தனபாண்டியன் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.