டிரைவரை தாக்கி ஆட்டோ திருட்டு
தேனி: பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெரு ஆட்டோ டிரைவர் சிவசக்திவேலன். தேனியில் இருந்து உப்பார்பட்டி செல்ல வேண்டும் என இருவர் இவரது ஆட்டோவில் ஏறினர். ஆட்டோ உப்பார்பட்டி டோல்கேட் அருகே சென்றது. அங்கு ஆட்டோ டிரைவருக்கு அறிமுகமான முருகேசன் நின்றிருந்தார். ஆட்டோ நிறுத்திய போது முருகேசன், ஆட்டோவில் வந்த இருவர் என மூவரும் சேர்ந்து சிவசக்திவேலனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். டிரைவரை மிட்டி ஆட்டோ சாவியை பறித்து ஆட்டோவை திருடி சென்றனர். ஆட்டோ டிரைவர் புகாரில் முருகேசன் உட்பட மூவர் மீது வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி மீது தாக்குதல்
தேனி: பழனிசெட்டிபட்டி மனோகரன் 52, விவசாயி. இவரது தோட்டம் ஜங்கால்பட்டியில் உள்ளது. தோட்டத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அங்கு வந்த சீனிவாசன், ஞானகுரு, ரேனுகாதேவி, பவித்திரன், ராஜ்குமார் ஆகியோர் மனோகரனை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து சென்றனர். மனோகரன் புகாரில் வீரபாண்டி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பள்ளி மாணவி மாயம்
தேனி: கம்பம் நாட்டுகல் நாகையா 45. இவரது மகள் தேனியில் உறவினர் வீட்டில் தங்கி 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீடு திரும்ப வில்லை. உறவினர் பள்ளிக்கு சென்று விசாரித்த போது, பள்ளி முடிந்து மாணவி சென்று விட்டதாக தெரிவித்தனர். தெரிந்த இடங்களில் தேடியும் கிடைக்காததால் நாகையா புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் முதியவர் பலி
போடி: அணைக்கரைப்பட்டி பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் சுருளிநாதன் 73. இவர் நேற்று முன்தினம் போடி - தேனி ரோட்டில் டூவீலரில் சென்றுள்ளார். எதிரே அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் 45. டூவீலரில் மனோஜ் என்பவரை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக வந்துள்ளார்.
இதில் சுருளி நாதன் மீது டூவீலர் மோதியதில் பலத்த காயம் அடைந்தார். தேனி அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சுருளிநாதன் சிகிச்சை பலன் இன்றி நேற்று இறந்தார். சுருளிநாதனின் மகள் சாந்தி புகாரில் போடி தாலுகா போலீசார் பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
டூவீலரில் விழுந்தவர் பலி
போடி: சிந்தலைச்சேரி வடக்கு தெரு செல்வம் 45. இவர் டூவீலர் பஞ்சர் கடை வைத்து நடத்தினார். கடந்த மாதம் டூவீலரில் சின்னமனூர் செல்லும் ரோட்டில் அதிவேகமாக சென்று உள்ளார். மழை காரணமாக ரோட்டில் தானாக வழுக்கி கீழே விழுந்தார். பலத்த காயம் அடைந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி செல்வம் நேற்று இறந்தார். செல்வம் மனைவி செல்வி புகாரில் போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

