ADDED : நவ 28, 2025 08:14 AM
பெண் மரணம்: போலீஸ் விசாரணை
தேனி: அண்மனைப்புதுார் விநாயகர் கோவில் தெரு நித்யா 40. இவர் நேற்று முன்தினம் கழுத்து வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நித்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர். நித்யாவின் தந்தை வீரபாண்டி பழனிச்சாமி, மருமகன் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மகளை துன்புறுத்தி வந்ததாக பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயிக்கு அரிவாள் வெட்டு
தேனி: அய்யனார்புரம் வடக்கு தெரு விவசாயி இளையராஜா 46. அவரது தோட்டத்திற்கு அருகே அம்மச்சியாபுரம் பாண்டி 38, ஆட்டோவை நிறுத்தினார். ஆட்டோவை தள்ளி நிறுத்துமாறு பாண்டியிடம் இளையராஜா கூறினார். ஆத்திரமடைந்த பாண்டி அரிவாளால் இளையராஜாவை தாக்கினார். காயமடைந்தவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இளையராஜாவின் மகன் கதிரேசன் புகாரில் பழனிசெட்டி பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரியை கியரில் வைத்து பழுது நீக்கிய டிரைவர் சக்கரம் ஏறி பலி
தேனி: விழுப்புரம் வண்டிப்பாளையம் குமார் 35, டிப்பர் லாரி டிரைவர். நேற்று முன்தினம் காலை பூதிப்புரம் செல்லும் ரோட்டில் மேம்பாலம் அருகே லாரியை நிறுத்தி இருந்தார். லாரி ஸ்டார்ட் ஆகவில்லை. இதனால் லாரி கியரை போட்டு விட்டு, லாரியின் அடியில் படுத்து செல்ப் ஸ்டார்டரை சரிசெய்தார். லாரி ஆன்ஆகி நகர்ந்தது. இதில் லாரியின் கீழ் படுத்திருந்த குமாரின் தலைமீது சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடலை போலீசார் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு கொண்டு சென்றனர். அவரது மனைவி கல்பனா புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதியவர் பலி
தேனி: போடேந்திரபுரம் பாலசுப்பிரமணி 70. இவர் குமுளி -திண்டுக்கல் ரோட்டில் நவ., 22ல் சைக்கிளில் சென்றார். போடேந்திரபுரம் விலக்கு அருகே சென்ற போது அவருக்கு பின்னால் வாடிப்பட்டி தங்கப்பாண்டி ஓட்டி சென்ற டூவீலர், சைக்கிள் மீது மோதியது. இதில் பாலசுப்பிரமணி காயமடைந்தார். தனியார், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது பேரன் கார்த்திக் 28, புகாரில் வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

