ADDED : நவ 04, 2024 05:57 AM

கூடலுார்:' குள்ளப்ப கவுண்டன்பட்டி ரோட்டின் ஓரத்தில் குவியும் பாலிதீன் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
கூடலுார், கம்பம் பகுதியில் இருந்து சுருளியாறு மின் நிலையத்திற்கு குள்ளப்ப கவுண்டன்பட்டி வழியாக செல்ல வேண்டும். ஊரின் துவக்கப் பகுதியில் ரோட்டின் ஓரத்தில் வீசப்படும் குப்பையால் துர்நாற்றம் ஏற்பட்டு பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலிதீன் கழிவுகள் அதிகமாக கொட்டப்படுகின்றன. இதில் தீ வைப்பதால் வெளியேறும் புகையால் காற்று மாசடைகிறது.
குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அதே பகுதியில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில் ஊராட்சி நிர்வாகம் இதை கண்டு கொள்வதில்லை. மழைக் காலங்களில் பிளாஸ்டிக் டம்ளர்களில் தேங்கி நிற்கும் மழை நீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவ வழிவகை செய்கிறது. இப்பகுதியில் குப்பை கொட்டாமல் தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சுகாதாரக் கேடு ஏற்படாத வகையில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் குப்பை கொட்ட இடம் தேர்வு செய்து அதற்கான நடவடிக்கையை ஊராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.