/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
/
மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2024 11:24 PM

தேனி: மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகள் தோறும் பொங்கல் வைத்து பூஜைகள் நடந்தன. மேலும் கோயில்களில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்ய மக்கள் கூடியதால் கூட்டம் அலைமோதியது. மேலும் மாவட்டத்தில் பல இடங்களில் இளைஞர் மன்றங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் சிறுவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் காலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் பலர் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி, பொங்கல் பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினர். தேனி மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் தரிசனத்திற்கு பக்தர்கள் வந்திருந்தனர்.
பெத்தாட்சி விநாயகர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. தேனி நகர்பகுதி, பொம்மையகவுன்டன்பட்டி, அல்லிநகரம் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவ கணேச கந்தபெருமாள் கோயில் பக்தர்கள் அதிக அளவில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பெரியகுளம்: பெரியகுளம், தேவதானப்பட்டி, வடுகபட்டி, லட்சுமிபுரம் உட்பட தாலுகா பகுதிகளில் பல பகுதிகளில் பொங்கல் விழா கோலாகலமாக நடந்தது.
அதிகாலையில் வீட்டு வாசல்களில் பெண்களால் அமைக்கப்பட்ட வண்ண கோலங்கள் கண்களை கவரும் வண்ணம் இருந்தன. வீடு தோறும் 'பொங்கலோ பொங்கல்' ஒலித்தது.
பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் மூலவர்களான வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயார் சிறப்பு அலங்காரத்திலும், உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கவுமாரியம்மன் கோயில், கம்பம் ரோடு காளியம்மன் கோயில், பால சாஸ்தா கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், சங்க விநாயகர் கோயில், சச்சுமடை பாண்டி முனீஸ்வரர் கோயில், லட்சுமிபுரம் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், ஈச்சமலை மகாலட்சுமி அம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், சில்வார்பட்டி முனியடுவ நாயனார் கோயில், மேல்மங்கலம் முத்தையா கோயில் உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. இக்கோயில்களில் திரளான மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார்.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயில், புதூர் சங்கடகர விநாயகர் கோயில், அக்ரஹாரம் பால விநாயகர் கோயிலில் விநாயகர், ஐய்யப்பன் கோயிலில் ஐய்யப்பனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.
போடி அருகே பிச்சாங்கரை கைலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச் சொக்கநாதர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயில், சுப்ரமணிய சுவாமி கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவனுக்கு, சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.