/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் விசைத்தறி நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி! தேவை அதிகரிப்பால் காட்டன் சேலைகள் ஆர்டர் குவிகிறது
/
மாவட்டத்தில் விசைத்தறி நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி! தேவை அதிகரிப்பால் காட்டன் சேலைகள் ஆர்டர் குவிகிறது
மாவட்டத்தில் விசைத்தறி நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி! தேவை அதிகரிப்பால் காட்டன் சேலைகள் ஆர்டர் குவிகிறது
மாவட்டத்தில் விசைத்தறி நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி! தேவை அதிகரிப்பால் காட்டன் சேலைகள் ஆர்டர் குவிகிறது
UPDATED : ஜன 01, 2026 01:46 PM
ADDED : ஜன 01, 2026 05:49 AM

ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகும் காட்டன் ரக சேலைகளுக்கு ஆர்டர் குவிந்து வருவதால் சேலை உற்பத்தியாளர்கள், நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உற்பத்தியை துவக்குகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், முத்துகிருஷ்ணாபுரம் பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் காட்டன் ரக சேலைகள் நவீன டிசைன்களில் உற்பத்தி ஆகிறது.
60, 80ம் நம்பர் நூல்களில் பல வண்ணங்களில் உற்பத்தி செய்யப்படும் நைஸ் ரக காட்டன் சேலைகளை பயன்படுத்துவதில் பெண்கள் பலருக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் உற்பத்தியாகும் சேலைகள் தமிழகம் முழுவதும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது. தீபாவளி பண்டிகையில் துவங்கிய வியாபாரம் விறுவிறுப்பு இன்றளவும் தொடர்கிறது. இதுபற்றி நெசவாளர்கள் கூறியதாவது:
வருவாய் அதிகரிப்பு விசைத்தறிகளில் நெசவு செய்யப்படும் காட்டன் ரக சேலைகள் உடனுக்குடன் விற்பனையாவதால் உற்பத்தியாளர்கள் உற்சாகப்படுகின்றனர். நெசவாளர்களுக்கு தினமும் தற்போது ரூ.500 முதல் 700 வரையும், ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்து வரும் நெசவாளர்களுக்கு ரூ.1000 வரையும் வருவாய் கிடைக்கிறது. சொந்தமாக தறி வைத்து உற்பத்தி செய்யும் நெசவாளர்கள் உற்பத்திக்கான இலக்கை அதிகரித்துக்கொள்கின்றனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு பின் வியாபார மந்தநிலையால் சேலைகள் தேக்கமடையும். தற்போது சேலைகள் இருப்பில் இல்லை.
புத்தாண்டின் துவக்கமே உற்சாகம் தான் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: தினமும் இப்பகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான சேலைகள் உற்பத்தி ஆகிறது. 60,80ம் நம்பர் மற்றும் முறுக்கு நூல் மூலம் உற்பத்தியாகும் நைஸ் ரக சேலைகள் உள்ளன.
கோர்வை பேடு, கோர்வை புட்டா, செல்ப் டிசைன், பட்டுசேலைகளுக்கு நிகரான மெர்சிடஸ் ரகங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. சேலைகள் ரூ.500 முதல் 1500 வரையிலான விலையில் உள்ளன. உற்பத்தி மற்றும் விற்பனை மையங்களில் தற்போது மொத்த விற்பனையுடன் சில்லரை விற்பனையும் அதிகரித்துள்ளது. ஆன்லைன் மூலமும் பலர் வியாபாரத்தை தொடர்கின்றனர். வழக்கமாக கோடையின் துவக்கமான பிப்ரவரி, மார்ச்சில் காட்டன் சேலைகள் விற்பனை விறுவிறுப்பாகும். இந்த ஆண்டு முன்கூட்டியே விறுவிறுப்பாக இருப்பதால் ஆங்கில புத்தாண்டின் துவக்கம் தேனி மாவட்ட நெசவுத் தொழிலில் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

