/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கருப்புக்கொடி கட்டி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
/
கருப்புக்கொடி கட்டி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
கருப்புக்கொடி கட்டி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
கருப்புக்கொடி கட்டி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : ஜன 14, 2025 11:05 PM

ஆண்டிபட்டி; சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரத்தில் பகுதியில் விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நடத்தி வரும் போராட்டம் இன்று 15 வது நாளாக தொடர்கிறது.
நேற்று முன் தினம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், அதிகாரிகள் தொழிலாளர்களை அலட்சியப்படுத்தியதாக தெரிவித்து, பல்வேறு இடங்களில் கருப்புக் கொடிகளை கட்டி அரசு அதிகாரிகளுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 5000க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படுத்தப்படும் இவர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் டிச.31ல் முடிந்தது. புதிய கூலி உயர்வுகோரி தொழிலாளர்கள் ஜனவரி 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். ஜனவரி 6ல் திண்டுக்கல்லில் தொழிலாளர் துணை ஆணையர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று முன்தினம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த பேச்சு வார்த்தையில் விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. இதனால் தொழிலாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஏ.ஐ.டி.யு.சி., தொழிற் சங்க மாவட்டச் செயலாளர் சென்றாயப்பெருமாள் கூறியதாவது: நேற்று முன்தினம் தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தைக்கு விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர். ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., தொ.மு.ச., அ.தொ.ச., பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க நிர்வாகிகள் அதிகாரிகள் அழைப்பை ஏற்று கூட்டத்திற்கு சென்றனர். அதிகாரிகள் இரு தரப்பினரையும் அழைத்து பேசவில்லை.
இதனை கண்டித்து வாழ்வாதாரம் பாதித்த தொழிலாளர்கள் சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் தைப்பொங்கல் நாளில் பல்வேறு இடங்களில் கருப்புக் கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர், என்றார்.