/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதல்வர் என்னுடன் திட்டத்தில் மாணவிக்கு ரூ.90 ஆயிரம் உதவி
/
முதல்வர் என்னுடன் திட்டத்தில் மாணவிக்கு ரூ.90 ஆயிரம் உதவி
முதல்வர் என்னுடன் திட்டத்தில் மாணவிக்கு ரூ.90 ஆயிரம் உதவி
முதல்வர் என்னுடன் திட்டத்தில் மாணவிக்கு ரூ.90 ஆயிரம் உதவி
ADDED : நவ 15, 2025 05:11 AM
மூணாறு: முதல்வர் என்னுடன் திட்டத்தில் தொடர்பு கொண்ட மாணவிக்கு மூன்று நாட்களில் கூட்டுறவு வங்கி மூலம் கல்வி பயில 90 ஆயிரம் உதவி கிடைத்தது.
கேரளாவில் பாதிக்கப்பட்டவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் என்னுடன் எனும் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. அதற்கான அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். மூணாறு அருகே தென்மலை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் தேயிலை தோட்ட தொழிலாளர்களான பவுன்துறை, சரஸ்வதி தம்பதியினரின் மகள் ஆர்த்தி பெங்களூருவில் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இறுதியாண்டு படிக்கிறார். வங்கியில் கல்வி கடன் பெற்று படித்த நிலையில், கல்லூரி நிர்வாகம் முதலில் கூறிய கட்டணத்தை விட அதிகம் வசூலித்ததால் இறுதி செமஸ்டர் தொகைரூ.90 ஆயிரம் செலுத்த இயலவில்லை. குடும்ப சூழல் காரணமாக படிப்பை தொடர இயலாத நிலை ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதமாக எர்ணாகுளத்தில் ஆர்த்தி 'ஹோம் நர்ஸ் 'சாக பணியாற்றினார். அங்கு அறிமுகம் ஆன பெண் ஒருவர் முதல்வர் என்னுடன் திட்டம் குறித்து கூறினார்.
அதற்கான அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தன்னுடைய நிலைமையை விளக்கினார். அவருக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடனுதவி வழங்க முதல்வர் அலுவலகம் உத்தரவிட்டது.
அது தொடர்பான தகவல் மூணாறு சர்வீஸ் கூட்டுறவு வங்கிக்கு கிடைத்தது. அதன் நிர்வாகம் பரிசீலித்தபோது, ஏற்கனவே ஆர்த்திக்கு வங்கி கடன் உள்ளதாலும், அவர்களது பெற்றோரின் நிதி நிலையை கருத்தில் கொண்டும் ரூ. 90 ஆயிரத்தை இலவசமாக கொடுக்க முடிவு செய்தனர். அதற்கு கூட்டுறவு வங்கி ஆட்சி குழு உறுப்பினர்கள், ஊழியர்கள், வங்கி சார்பிலான தங்கும் விடுதி ஊழியர்கள் ஆகியோர் உதவினர்.
அத்தொகையை வங்கி தலைவர் சசி, ஆர்த்தியிடம் நேற்று வழங்கினார். வங்கி செயலர் ராணி, உறுப்பினர் உள்பட பலர் உடனிருந்தனர். முதல்வர் என்னுடன் திட்டத்தில் தொடர்பு கொண்ட மூன்று நாட்களில் உதவி கிடைத்ததால் ஆர்த்தி மகிழ்ச்சி அடைந்தார்.

