/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பால் கொள்முதல் விலை குறைப்பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு
/
பால் கொள்முதல் விலை குறைப்பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு
பால் கொள்முதல் விலை குறைப்பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு
பால் கொள்முதல் விலை குறைப்பால் உற்பத்தியாளர்கள் பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2025 03:12 AM

ஆண்டிபட்டி பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடை வளர்ப்பில் கறவை மாடுகள் மூலம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் பால் உற்பத்தியாகிறது. கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பால் உள்ளூர் தேவைகளுக்கு பின் கொள்முதல் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கொள்முதலில் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளது. வழக்கமாக கோடைகாலத்தில் குறையும் பால் உற்பத்தி மழைக்கு பின் படிப்படியாக உயரும்.
கடந்த சில வாரங்களில் பெய்த மழையால் கோடையின் தாக்கம் குறைந்து தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. பசுந்தீவனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் கறவை மாடுகளுக்கு அன்றாடம் கொடுக்கும் செயற்கை தீவனத்தின் அளவை குறைத்து பசுந்தீவனங்களை கொடுக்கின்றனர். கடந்த சில வாரங்களில் இயற்கை தீவன பயன்பாடு அதிகரிப்பால் பால் உற்பத்தி உயர்ந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை குறைத்து நிர்ணயம் செய்கின்றனர். கொள்முதல் விலையை குறைப்பதால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
பால் உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பசுந்தீவனங்கள் மட்டும் கொடுத்து கறவை மாடுகளை ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது சிரமம். கறவை மாடுகளுக்கு அன்றாடம் கொடுக்கப்படும் கம்பு மாவு கிலோ ரூ.50, பாசிப்பயறு டஸ்ட் கிலோ ரூ.30, பருத்திக்கொட்டை கிலோ ரூ. 42, புண்ணாக்கு கிலோ ரூ.60 ஆக உள்ளது. கறவை மாடுகளுக்கான தீவனம், மருத்துவம், பராமரிப்பு செலவு நாளுக்கு நாள் அதிகமாகிறது. இந்நிலையில் பால் கொழுப்பு, இதர சத்து, அடர்த்தியை காரணம் கூறி கொள்முதல் தனியார், ஆவின் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.3வரை விலையை குறைப்பதால் உற்பத்தியாளர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.
கொள்முதல் விலையில் அரசு கவனம் செலுத்தி உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.