/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கானல் நீரான அரிசி ஆலை அமைக்கும் திட்டம்
/
கானல் நீரான அரிசி ஆலை அமைக்கும் திட்டம்
ADDED : டிச 08, 2025 05:49 AM
தேனி: மாவட்டத்தில் சில ஆண்டுகளுக்கு முன் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், அரிசி ஆலை அமைக்கும் திட்டத்திற்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்தது. தற்போது அத்திட்டம் முடங்கியுள்ளது.
தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்திற்கும் அதிகமான பரப்பில் நெல் சாகுபடி ஆகிறது.
இதில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து, ஆண்டிற்கு தோராயமாக 7 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மாதந்தோறும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் சுமார் 6 ஆயிரம் டன் அரிசி ரேஷன் கடைகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடிகளுக்கு அனுப்பப்படுகிறது. மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை இங்கேயே அரிசியாக உற்பத்தி செய்ய சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. அங்கு தினமும் சுமார் 200 டன் அரிசி உற்பத்தி செய்யும் வகையில் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மூலம் இடம் தேர்வு செய்யும் பணிகள் நடந்தன. ஆனால் அத்திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் முடங்கியுள்ளது. இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பாலமுருகன் கூறுகையில், ''அரிசி ஆலை அமைப்பது, அரசின் கொள்கை முடிவு. தற்போது ஏதும் திட்டம் இல்லை., என்றார்.

