/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிறிய கிராமங்களை இணைக்க வி.ஏ.ஓ.,க்கள் சங்கம்... எதிர்ப்பு; புதிய பணியிடங்களை உருவாக்க வலுக்கும் கோரிக்கை
/
சிறிய கிராமங்களை இணைக்க வி.ஏ.ஓ.,க்கள் சங்கம்... எதிர்ப்பு; புதிய பணியிடங்களை உருவாக்க வலுக்கும் கோரிக்கை
சிறிய கிராமங்களை இணைக்க வி.ஏ.ஓ.,க்கள் சங்கம்... எதிர்ப்பு; புதிய பணியிடங்களை உருவாக்க வலுக்கும் கோரிக்கை
சிறிய கிராமங்களை இணைக்க வி.ஏ.ஓ.,க்கள் சங்கம்... எதிர்ப்பு; புதிய பணியிடங்களை உருவாக்க வலுக்கும் கோரிக்கை
ADDED : மே 05, 2025 07:13 AM

கம்பம்: தேனி மாவட்டத்தில் வருவாய் கிராமங்களை பிரிப்பதற்கான அரசாணை வெளியிட்டும், அதிலுள்ள முக்கிய கருத்துருவான சிறிய வருவாய் கிராமங்களை இணைத்து, ஏற்கனவே இருந்த பணியிடங்களை நீர்த்துப் போக செய்யும் நடைமுறைக்கு வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதால், அரசாணை அமலாவதில் சிக்கல் நீடிக்கிறது.
வருவாய் கிராமங்கள் மக்கள் தொகை, நிலப்பரப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும். தேனி மாவட்டத்தில் 97 வருவாய் கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமமும் குறைந்தது இரண்டாகவும், அதிகபட்சம் 5 கிராமங்களாகவும் பிரிக்க தகுதி வாய்ந்ததாக உள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் அதிகபட்ச நிலப்பரப்பு 300 எக்டேராக உள்ளது.
ஆனால், தேனி மாவட்டத்தில் மேகமலை 8 ஆயிரம் எக்டேர், மயிலாடும்பாறை - கடமலைக்குண்டு 8 ஆயிரம் எக்டேராக உள்ளனர். தேனி நகரம் 2 ஆயிரம் எக்டேராகவும், இக்கிராமங்களில் நிர்ணயித்த அளவிற்கு மேல் மக்கள் தொகை லட்சக்கணக்கில் உள்ளது. தேனிக்கு ஒரே ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் மட்டுமே உள்ளது.
முத்துலாபுரம், காமயகவுண்டன்பட்டி, தேவாரம், மார்க்கையன்கோட்டை, சீப்பாலக்கோட்டை, பண்ணைப்புரம் உள்ளிட்ட பெரிய கிராமங்கள் அதிகம் உள்ளன.
இவற்றை இரண்டும், அதற்கு மேலும் பிரிக்கலாம். கூடலுாரில் மட்டும் நான்கு வி.ஏ.ஓ.க்கள் இருக்கும் போது, தேனிக்கு ஒரு வி.ஏ.ஓ., மட்டும் பணியில் உள்ளார்.
எனவே வருவாய் கிராமங்களை பிரிப்பதற்குரிய அரசாணை வெளியிட வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று கடந்தாண்டு வருவாய் நிர்வாக ஆணையரகம் அதற்கான அரசாணையை பிறப்பித்தது.
மாவட்டத்தில் தற்போதுள்ள 97 வருவாய் கிராமங்கள், 200 வரை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். அப்போது குறைந்தது 100 வி.ஏ.ஓ..க்கள் பணியிடங்களை புதிதாக உருவாகும். எனவே புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். பலருக்கு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆனால் அரசு பிறப்பித்த அரசாணையில் வி.ஏ.ஓ.க்கள் எதிர்பார்த்ததற்கு நேர்மறையான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக சிறிய அளவிலான மக்கள் தொகை, நிலப்பரப்பு உள்ள வருவாய் கிராமங்களை இணைந்து ஒரு வருவாய் கிராமமாக உருவாக்கி, ஏற்கனவே இருந்த வி.ஏ.ஓ., பணியிடத்தை நீர்த்துப் போக செய்யும் நிலை உருவாகியுள்ளது. எனவே வி.ஏ.ஓ.க்கள் மத்தியில் அரசாணையில் உள்ள இந்த கருத்துரு குறித்து அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
எனவே அந்த அரசாணை அமலாவதில் சிக்கல் நீடித்துள்ளது.