/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மீன்கள் வாங்க வைகை அணையில் குவிந்த பொதுமக்கள்
/
மீன்கள் வாங்க வைகை அணையில் குவிந்த பொதுமக்கள்
ADDED : ஜன 13, 2025 04:17 AM

ஆண்டிபட்டி : தைப்பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை துவங்கியுள்ளதால் வைகை அணையில் பிடிக்கப்படும் மீன்களை பொது மக்கள் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர்.
மீன்வளத்துறை மூலம் வைகை அணையில் ஆண்டுதோறும் கட்லா, மிருகாள், ரோகு வகையைச் சேர்ந்த பல லட்சம் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்கு விடப்படுகின்றன.
அணையில் இயற்கையாக வளரும் ஆறா சொட்டை வாழை, கெளுத்தி, கெண்டை வகை மீன்களும் அதிகம் உள்ளன. அணையில் வளர்ந்த மீன்களை பிடித்து விற்பனை செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
மீனவர் கூட்டுறவு சங்கத்தில் பதிவு பெற்ற மீனவர்கள் வைகை அணையில் அன்றாடம் மீன்களைப் பிடித்து, ஒப்பந்ததாரரிடம் கொடுத்து சம்பளம் பெறுகின்றனர். அணையில் பிடிக்கப்படும் மீன்களை அன்றாடம் நீர்த்தேக்கப் பகுதிக்கு வந்து பொது மக்கள், வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். தற்போது அணை நீர்மட்டம் 60 அடிக்கும் அதிகம் இருப்பதால் பிடிபடும் மீன்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை துவங்கி உள்ளது. மீன்கள் வரத்து குறைந்துள்ள நிலையில் மீன்களை வாங்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பொது மக்கள் காத்திருந்து, மீன்களை வாங்கிச் செல்கின்றனர்.