/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுகாதாரக்கேடால் 'அம்மா' உணவகம் அருகே உவ்வே பெரியகுளம் மார்க்கெட்டில் பொதுமக்கள் அவதி
/
சுகாதாரக்கேடால் 'அம்மா' உணவகம் அருகே உவ்வே பெரியகுளம் மார்க்கெட்டில் பொதுமக்கள் அவதி
சுகாதாரக்கேடால் 'அம்மா' உணவகம் அருகே உவ்வே பெரியகுளம் மார்க்கெட்டில் பொதுமக்கள் அவதி
சுகாதாரக்கேடால் 'அம்மா' உணவகம் அருகே உவ்வே பெரியகுளம் மார்க்கெட்டில் பொதுமக்கள் அவதி
ADDED : ஜூன் 21, 2025 12:39 AM

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி மார்க்கெட் பகுதியில் நிலவும் சுகாதாரச் சீர்கேடால் 'அம்மா' உணவகத்தில் மூக்கை பொத்தியவாறு சாப்பிடும் அவல நிலை தொடர்கிறது.
பெரியகுளம் நகராட்சி 19 வது வார்டில் மார்க்கெட் தெரு, சுதந்திர வீதி, காட்டாமேட்டு 1 வது தெரு, அழகப்பன் சந்து பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
நூற்றாண்டு கடந்த நகராட்சியின் கண்ணாடி என அழைக்கப்படும் மார்க்கெட் உள்ளது. மார்கெட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
நடைபாதையில் இருபுறமும் காய்கறிகடைகள், மளிகைகடைகள் ஆக்கிரமித்துள்ளதால் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளது. இதே நிலைதான் பஜார்வீதியிலும் உள்ளது.
மார்கெட்டில் லேசான மழை செய்தாலே நுழைவு பாதையிலிருந்து சுதந்திர வீதி முடிவு வரை 300 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் கற்களில் சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்வோர் வழுக்கி விழுகின்றனர். மாடுகள் தாராளமாக உலா வருவதால் காய்கறி வாங்கும் பெண்கள் அச்சப்படுகின்றனர்.
பஜார் வீதியிலிருந்து மார்க்கெட் நுழையும் இடத்தில் வியாபாரிகள் இரவில் கழிவுகளை கொட்டுகின்றனர். மறுநாள் காலை 10:00 மணிவரை குப்பை அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது.
காலையில் பரபரப்பாக இயங்கும் ஒரே இடம் பஜார் மற்றும் மார்க்கெட் பகுதிதான்.
ஆனால் இங்கு குப்பையை நகராட்சி துாய்மை பணியாளர்கள் காலை 8:00 மணிக்குள் அகற்றாமல் காலை 10:00மணிக்கு குப்பை லாரியை போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தி பீக் ஹவர்சில் குப்பை அகற்றுவதால் மக்கள் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்வோர் பாதிப்பதுடன் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது.
மார்க்கெட் இணைப்பு பகுதியான அழகப்பன் சந்தில் துவங்கி 150 மீட்டர் தூரம் காளஹஸ்தீஸ்வரர் கோயில் முன்புறம் முடிகிறது. இந்தப்பகுதியில் மண் குழாய் அகற்றி புதிய இரும்பு பைப் அமைக்கும் பணி மந்த கதியில் நடக்கிறது. இதனால் பாதாளச்சாக்கடை கழிவுநீர் வெளியேறி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
காலை, மாலை தூய்மை பணி அவசியம்
ரவிசங்கர், மார்க்கெட் வீதி, பெரியகுளம் : மார்க்கெட் பகுதியில் காலை, மாலை தூய்மைப்பணி செய்தும், பிளிச்சிங் பவுடர் தூவ வேண்டும். காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்களை மாடுகள் முட்டுகிறது. மூன்றாந்தல் பகுதியிலிருந்து மார்க்கெட்டிற்கு செல்லும் இணைப்பு தெருவில் ஒழுங்கற்ற முறையில் டூவீலர்களை நிறுத்துகின்றனர்.
அம்மா உணவகம் பின்புறம் மார்க்கெட் வளாகத்திற்குள் திறந்த வெளி சுகாதார வளாகமாக செயல்படுகிறது. இதனால் அம்மா உணவகத்தில் சாப்பிடுபவர்கள் மூக்கை மூடிக்கொண்டு சாப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது. மேன்ஹோல் மூடப்படாமல் உள்ளது. மார்க்கெட் பின்புறம் நடைபாதையில் இரு இடங்களில் சேதமடைந்த கம்பிகளில் நடந்து செல்பவர்கள் இடறி காயப்படுகின்றனர்.
அடிப்படை வசதி மேம்படுத்த வேண்டும்
சலீம் ராஜா, தலைவர், தென்கரை மார்க்கெட் சங்கம்: ஆண்டிற்கு மார்க்கெட்டில் 28 கடைகளுக்கு ரூ.10.50 லட்சம் குத்தகை வரி கட்டுகிறோம். மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். மாடுகளால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
மழை காலங்களில் வழுக்கி விழுவதை தடுக்க பேவர் பிளாக் கற்களில் தேங்கும் சேறு, சகதிகளை அகற்ற வேண்டும்.மார்க்கெட்டில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சுகாதார வளாகத்தில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் பயன்பாடின்றி கிடக்கிறது. தினமும் காலை முதல் இரவு வரை இரண்டு நிரந்தர தூய்மை பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.
போக்குவரத்து போலீசார் காலை 7:45 மணி முதல் காலை 9:00 வரை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும்.