/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குவாரியில் கல் உடைக்கும் உரிமை பிரச்னை தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் நிர்வாகி கொலை முன்னாள் தி.முக., நிர்வாகியிடம் விசாரணை
/
குவாரியில் கல் உடைக்கும் உரிமை பிரச்னை தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் நிர்வாகி கொலை முன்னாள் தி.முக., நிர்வாகியிடம் விசாரணை
குவாரியில் கல் உடைக்கும் உரிமை பிரச்னை தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் நிர்வாகி கொலை முன்னாள் தி.முக., நிர்வாகியிடம் விசாரணை
குவாரியில் கல் உடைக்கும் உரிமை பிரச்னை தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் நிர்வாகி கொலை முன்னாள் தி.முக., நிர்வாகியிடம் விசாரணை
ADDED : ஆக 27, 2025 02:55 AM

கம்பம்:தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டி கல்குவாரியில் கல் உடைத்து விற்பனை செய்யும் உரிமை குறித்து நடந்த பேச்சு வார்த்தையில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி கம்பம் நகர் செயலாளர் சசிக்குமார் 43, குத்தி கொலை செய்யப்பட்டார்.
காமயகவுண்டன்பட்டி கிழக்கு பகுதி மலையடிவாரத்தில் கல்குவாரிகள் உள்ளன. இப் பகுதி புலிகள் காப்பகமாக இருப்பதால் பல ஆண்டுகளாக கல் உடைக்க அரசு அனுமதி வழங்காமல் நிறுத்தியது. பின் வனத்துறை அனுமதியில் மகளிர் குழுக்களுக்கு குவாரி நடத்த அனுமதி வழங்கி செயல்பட துவங்கியது. இதில் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டது. சமீபத்தில் குழு உறுப்பினர்கள் சிலர் தாங்கள் சொந்தமாக கல் உடைத்து விற்பனை செய்ய உள்ளதாக கூறியதால், இரு தரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில் கல்குவாரியை கேரளாவை சேர்ந்தவர்கள் நடத்துவதாகவும், உரிமத்தை ரத்து செய்ய கோரியும் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர் சில நாட்களுக்கு முன் மலை மீது ஏறி போராட்டம் நடத்தினர்.
பேச்சு வார்த்தையில் கொலை நேற்று முன்தினம் இரவு காமயகவுண்டன்பட்டியில் ஒரு சமூகத்திற்கு சொந்தமான சமுதாய கூடத்தில் இப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கம்பத்தில் வசித்த தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி கம்பம் நகர் செயலாளர் சசிக்குமார் 43, பங்கேற்றார். பேச்சுவார்த்தையின் போது சசிக்குமாருக்கும், காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி 53,க்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது சின்னச்சாமி இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து சசிக்குமாரின் இடது கழுத்தில் குத்தியுள்ளார்.
பலத்த காயமடைந்த சசிக்குமார் ஆம்புலன்சில் கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கொலையான சசிக்குமாரின் தம்பி ஜெகதீஷ்குமார் ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரில், 'எனது அண்ணனை பேச்சுவார்த்தைக்கு வருமாறு சின்னச்சாமி, குரு இளங்கோ, ராஜேந்திரன், செல்லத்துரை, கவுரி, திருமலை நம்பி, அமைதி, அல்லிபாலா, ராஜாமணி, மணிமாறன் அழைத்ததன் பேரில் சென்றார். அங்கு அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டனர்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையிலான போலீஸ் குழு, இக் கொலை குறித்து காமயகவுண்டன்பட்டி சின்னச்சாமி 53, முன்னாள் தேனி தெற்கு மாவட்ட துணை செயலாளர் குரு இளங்கோ 55, ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர்.
மறியல் போராட்டம் சசிக்குமாரின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் வாங்க மறுத்து தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியினர், உறவினர்கள் கம்பம் அரசு மருத்துவமனை முன்பு ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது கொலையாளிகளை கைது செய்யவும்; குவாரி உரிமம்
ரத்து செய்யவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவும் கோரினர். உத்தமபாளையம் ஆர்.டி.ஒ., செய்யது முகமது, டி. எஸ்.பி., வெங்கடேசன் பேச்சு நடத்திய பின் உடலை வாங்கி சென்றனர்.