கேள்விக்குறியான பி.டி.ஆர்., கால்வாய் ஒருபோக சாகுபடி
கேள்விக்குறியான பி.டி.ஆர்., கால்வாய் ஒருபோக சாகுபடி
UPDATED : அக் 06, 2026 12:00 AM
ADDED : அக் 05, 2026 04:44 PM
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டம் குறைவால் பி.டி.ஆர்., மற்றும் பெரியார் பாசன கால்வாய்கள் மூலம் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் ஒரு போக நெல் சாகுபடி கேள்விக்குறியாகி உள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடியாகிறது. இந்தாண்டு எல்நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவ மழை குறைந்தது. கம்பம் பள்ளதாக்கில் ஜூனில் துவங்க வேண்டிய முதல்போக சாகுபடி செப்.,ல் துவங்கியது.
முல்லைப் பெரியாற்றில் இருந்து வாய்க்கால் பட்டி அருகே பி.டி.ஆர்.,மற்றும் பெரியார் கால்வாய்களில் ஒருபோக சாகுபடிக்காக 120 நாட்களுக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். ஆண்டு தோறும் அக்., முதல் அல்லது 2வது வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். இதனால் வேப்பம்பட்டி, சீப்பாலக்கோட்டை, தாடிச்சேரி, தர்மாபுரி, வெங்கடாஜலபுரம், கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்த நகரம் உள்ளிட்ட கிராமங்களில் 5100 ஏக்கரில் ஒரு போக விவசாயம் நடைபெறும். இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
முல்லைப்பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 116.60 அடியாக உள்ளது. இது கம்பம் பள்ளதாக்கு விவசாயத்திற்கு போதாத நிலை உள்ளது. இதுனால் பி.டி.ஆர்., மற்றும் பெரியார் கால்வாய்களில் ஒருபோக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
நீர்வளத் துறையினர் கூறுகையில்,'வடகிழக்கு பருவ மழையை எதிர்பாத்துள்ளோம். மழை பெய்து அணையின் நீர்மட்டம் பாதுகாப்பான நிலைக்கு வந்தால் ஒரு போக பகுதிகளுக்கு தண்ணீர் திறப்பது பற்றி ஆலோசிக்கப்படும்' என்றனர்.
