/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நகரமாக மாறும் போடி
/
ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நகரமாக மாறும் போடி
ADDED : அக் 27, 2024 04:14 AM

போடி : ஐந்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கி, ரெடிமேட் ஆடை தயாரிப்பு நகரமாக போடி ரங்கநாதபுரம் மாறி வருகிறது. புது,புது டிசைனில் நேர்த்தியாக தயாராகும் ஆடைகளுக்கு வரவேற்பு அதிகரிப்பதால் வெளிமாநில வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
விவசாயம் பிரதான தொழிலாக விளங்கும் தேனி மாவட்டத்தில் போடி அருகே ரங்கநாதபுரத்தில் ரெடிமேட் ஆடை தயாரிப்பு நகராக மாறி வருகிறது. இங்கு 1200 குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பலர் 30 ஆண்டுகளுக்கு முன் தலைச்சுமை, சைக்கிள், டூவீலர், கார் மூலமாக ஜவுளி வியாபாரம் செய்தனர். நாளடைவில் சூரத், அகமதாபாத், மங்களூர், ஜெய்ப்பூர், சேலம் இளம்பிள்ளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்தனர். இத் துணிகளை தரம் பிரித்து பெண் குழந்தைகள் முதல் பெரியவர் வரை சுடிதார், பட்டு பாவாடை, நைட்டி, சிறுவர்களுக்கான வேஷ்டி, சட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சொந்தமாக ரெடிமேட் தயாரிக்கும் பணியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டுள்ளனர். போடி, ரங்கநாதபுரம், சில்லமரத்துப்பட்டி, சிலமலை, ராசிங்காபுரம், பத்திரகாளிபுரம், விசுவாசபுரம், மேலச் சொக்கநாதபுரம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் இருந்து 1500 க்கும் மேற்பட்ட ஆண், பெண் கூலித் தொழிலாளர்கள் இங்கு வந்து ரெடிமேட் ஆடை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
5ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை
இங்கு உருப்படிக்கு ஏற்ப கூலி நிர்ணயம் செய்து தினமும் பெண்கள் குறைந்தது ரூ. 300 முதல் ரூ.450 வரையிலும், ஆண்கள் ரூ. 300 முதல் 500 வரையிலும், கட்டிங் மாஸ்டர்கள் ரூ.600 முதல் ரூ.1000 வரை சம்பளம் பெறுகின்றனர். இவர்களுக்கு தினசரி அல்லது வார சம்பளமாக வழங்கப்படுகிறது. புதுப்புது மாடல்களில் நேர்த்தியாக தயாரிக்கப்படும் ரெடிமேட் ஆடைகளுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த ஆடைகள் கடலோர பகுதியான நாகர்கோயில், திருவனந்தபுரம், கொச்சின், ஆலப்புழா, கோழிக்கோடு, குமுளி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், இலங்கை, மலேசியா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் விசேஷ காலங்களுக்கு ஏற்ப விற்பனை செய்து வருகின்றனர்.
இது குறித்து வனராஜ், தலைவர், ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பாளர்கள் சங்கம், பி.ரங்கநாதபுரம் கூறியதாவது:
வெளி மாநிலம் மற்றும் தமிழக பகுதி மில்கள், மொத்த ஜவுளி கடைகளில் துணிகளை மீட்டர் கணக்கில் விலைக்கு வாங்கி தரம் பிரித்து பட்டு பாவாடை, சுடிதார், கவுன், நைட்டி, சிறுவர்களுக்கான மாப்பிள்ளை வேஷ்டி, சட்டை போன்ற ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு தீபாவளி புது ட்ரண்ட் ஆக தாவணி பைப்பிங் கவுன், காப்பர் ஜரிகை வேஷ்டி, சட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெடிமேட் ஆடைகள் அளவுக்கு தகுந்தாற்போல் குறைந்தது ரூ.100 முதல் ரூ.450 வரையிலான விலையில் உள்ளது. இங்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் வெளிமாநில வியாபாரிகள் நேரடியாக கொள்முதல் செய்கின்றனர். அதிக மாடலில் விலை குறைவாக உள்ளதால் தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தேவைக்கான ஆடைகளை நேரில் வந்து வாங்குகின்றனர்.
ரெடிமேட் சந்தையாக மாறும்
இத்தொழிலை ஊக்கப்படுத்தவும், ஏராளமானவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திட இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மானியத்துடன் பாங்க் கடன் வழங்கினால் தொழில் அடுத்த இலக்கை நோக்கி செல்லும். ஈரோடு அருகேயுள்ள சித்தோடு ஜவுளி சந்தை போன்று தேனி மாவட்டத்திலும் ரெடிமேட் ஜவுளி சந்தை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.