/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பின்னத்தேவன்பட்டியில் திறப்பு விழாவுடன் மூடப்பட்ட ரேஷன் கடை பொருட்கள் வாங்க 5 கி.மீ., செல்லும் அவலம்

ADDED : ஜூலை 28, 2025 05:07 AM

தேனி :  தேனி பின்னத்தேவன்பட்டியில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு, 7 மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழாவுடன் மூடப்பட்டதால் பொது மக்கள் சிரமப்படுகின்றனர்.
தேனி வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பின்னத்தேவன்பட்டி அருகே நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புப் பகுதி, பின்னத்தேவன்பட்டி, வீர பொம்மிநாயக்கனுார் ஆகிய பகுதிகள் அருகருகே அமைந்துள்ளது.
இந்த மூன்று பகுதிகளிலும் சேர்த்து சுமார் 180க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 5 கி.மீ., துாரம் உள்ள அம்மாபுரத்திற்கு சென்று வருகின்றனர். இந்த பகுதியில் அரசு பஸ் வசதி கூட கிடையாது. இதனால் ஆட்டோக்கள், மினி பஸ் மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் குடியிருப்பு பகுதியில் ரூ. 15 லட்சம் செலவில் ரேஷன் கடை அமைக்கப்பட்டது. அதனை 2024 டிச.,ல் தங்கதமிழ்செல்வன் எம்.பி., பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் துவங்கி வைத்தனர். அன்று சிலருக்கு அரிசி வழங்கப்பட்டது.
அதன் பின் பூட்டப்பட்ட அந்த ரேஷன் கடை 7 மாதங்களாக பூட்டிய நிலையிலேயே உள்ளது. இதனால் இலவச அரிசியை பணம் செலவு செய்து வீடுகளுக்கு கொண்டு வரும் அவல நிலை தொடர்வதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.