/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
/
ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு
ADDED : செப் 29, 2024 02:36 AM
தேனி:பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட 32 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர் சங்கத்தினர் அக்., 16,17,18 ஆகிய மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக மாநில பொருளாளர் பொன் அமைதி தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பொது வினியோக திட்டத்திற்கு தனித்துறை உருவாக்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் இதுவரை தனித்துறை ஏற்படுத்தவில்லை. மகளிர் சுயஉதவிக்குழு ரேஷன் கடைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதியம் வழங்குவது இல்லை. விற்பனையில் குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்படும் விளிம்புத்தொகையில் சம்பளம் பெறுவதுடன், கடைவாடகை, ஏற்று, இறக்கு கூலி, மின்கட்டணம் செலுத்தும் சூழல் உள்ளது.
சில மாதமாக விளிம்புத்தொகையும் வழங்கப்படவில்லை. இதனால் இந்த ரேஷன் கடைகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களை பொட்டலமாக வழங்க நடவடிக்கை இல்லை. கடைகளுக்கு புதிய விற்பனை முனையம் வழங்கிய பின்பும் இணைய சேவை சரிவர கிடைக்கவில்லை.
இதனால் பொருட்கள் வினியோகத்தில் காலதாமதமாகி பிரச்னை ஏற்படுகிறது. இணைய சேவையை மேம்படுத்த வேண்டும். ரேஷன் கடை பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட 32 கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.,16,17,18 ல் மாநில அளவில் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்