/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசன நீர் திறப்பு
/
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசன நீர் திறப்பு
ADDED : அக் 18, 2024 03:19 AM
ஆண்டிபட்டி:வைகை அணையில் நிறுத்தப்பட்ட நீர் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.
பெரியாறு பாசனப்பகுதி மற்றும் திருமங்கலம் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களான ஒரு லட்சத்து 5002 ஏக்கர் நிலங்களுக்கு செப்.,15ல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோல் பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு ஜூலை 3ல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மழைக்கான சூழல் தொடர்ந்ததால் தண்ணீர் தேவை குறைந்தது. இதனைத் தொடர்ந்து அக்.14ல் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது.
தற்போது மழைக்கான சூழல் மாறி உள்ளதால் அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் கால்வாய் வழியாக மீண்டும் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று அணை நீர்மட்டம் 56.76 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 71 அடி). அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 1281 கனஅடி. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி -- சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.