/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் வரலாறு காணாத மழை நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது - கேரளாவுக்கு 7163 கன அடி வெளியேற்றம்
/
பெரியாறு அணையில் வரலாறு காணாத மழை நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது - கேரளாவுக்கு 7163 கன அடி வெளியேற்றம்
பெரியாறு அணையில் வரலாறு காணாத மழை நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது - கேரளாவுக்கு 7163 கன அடி வெளியேற்றம்
பெரியாறு அணையில் வரலாறு காணாத மழை நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது - கேரளாவுக்கு 7163 கன அடி வெளியேற்றம்
ADDED : அக் 19, 2025 03:00 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் நேற்று முன்தினம் இரவு பெய்த வரலாறு காணாத மழையால் அணைக்கு நீர்வரத்து 71 ஆயிரம் கன அடியை தாண்டியது. இதனால் நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடிக்கு மேல் உயர்ந்து 138 அடியை எட்டியது. ரூல்கர்வ் விதிமுறையால் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் வழியாக கேரள பகுதிக்கு 7163 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கனமழை தொடர்ந்து பெய்தது. தேக்கடியில் 158.40 மி.மீ., பெரியாறில் 68 மி.மீ., பதிவானது. இதனால் இதுவரை இல்லாத வகையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 71 ஆயிரத்து 733 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடிக்கு மேல் உயர்ந்து 138 அடியை எட்டியது (மொத்த உயரம் 152 அடி).
ரூல்கர்வ் (நீர்மட்ட கால அட்டவணை) விதிமுறைப்படி தற்போது அணையின் நீர்மட்டம் 137.75 அடியாகவும், அக்.30ல் 138 அடியாகவும் இருக்க வேண்டும். இந்நிலையில் நீர்மட்டம் இரவு 136 அடியை எட்டியவுடன் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை தமிழக நீர்வளத் துறையினர் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவித்தனர். நேற்று நீர்மட்டம் 138 அடியை கடந்ததால் அணையை ஒட்டியுள்ள 13 ஷட்டர்கள் திறக்கப்பட்டு கேரளப் பகுதிக்கு வினாடிக்கு 7163 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நீர்வரத்து அதிகமாக இருப்பதால் திறக்கப்படும் நீரின் அளவு அவ்வப்போது அதிகரிக்கப்படும். அணையில் நீர் இருப்பு 6571 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு1400 கன அடி திறக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் முகாம்
கனமழையைத் தொடர்ந்து நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் குமார், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், மகேந்திரன், பாலசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் அணைப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் இரவில் கனமழை பெய்த போதிலும் நேற்று பகலில் மழை சற்று குறைந்தது.
தடுப்பணை உடைந்தது
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் லோயர்கேம்பில் துவங்கி வைகை அணை வரையுள்ள முல்லைப் பெரியாற்றில் ஓடுகிறது. இதன் மூலம் லோயர்கேம்ப் குருவனத்துப்பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய 4 இடங்களில் மினி பவர் ஹவுஸ் அமைத்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக தண்ணீரை தேக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள மினி பவர் ஹவுசின் தடுப்பணையின் தெற்குப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீர் அதிரடியாக வெளியேறியது. இரவுபணியில் இருந்த அலுவலர்கள் மேல் பகுதிக்கு சென்று உயிர் தப்பினர். அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த குள்ளப்பகவுண்டன்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான குப்பை அள்ளும் டிராக்டர், மின்வாரிய அலுவலர்களின் 2 டூவீலர்கள் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது.
மின்சாதன பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. இங்கு இரண்டு ஜெனரேட்டர் மூலம் தலா 1.25 மெகாவாட் வீதம் 2.5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் மின் உற்பத்தி செய்ய நீண்ட நாட்களாகும்.