/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பிறப்பு சான்றிதழ் இரு மொழிகளில் வழங்க கோரிக்கை
/
பிறப்பு சான்றிதழ் இரு மொழிகளில் வழங்க கோரிக்கை
ADDED : ஆக 30, 2025 04:33 AM
தேனி: ''நகராட்சிக்கு உட்பட்ட மருத்துவமனைகளில் 2018 க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம் என தனித்தனியாக பிறப்பு சான்றிதழ் பெறும் நிலை உள்ளது. ஒரே சான்றிதழில் இரு மொழிகள் இடம் பெறும் வகையில் சான்றிதழ் வழங்க வேண்டும்.'' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நகர் பகுதி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பற்றிய விபரங்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டு பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. 2015ல் பிறந்த குழந்தைக்கு வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி தமிழில் மட்டுமே உள்ளது. ஆனால், அந்த குழந்தை தற்போது பள்ளியில் சேரும் போதும், பிற ஆவணங்களுக்கு விண்ணப்பிக்கும் போதும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என கேட்கின்றனர். இதனால் ஒரே குழந்தைக்கு தமிழில் ஒரு சான்றிதழ், ஆங்கிலத்தில் ஒரு சான்றிதழ் வைத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு வழங்கும் சான்றிதழில் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
இதுபற்றி நகராட்சி சுகாதாரப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: 2018க்கு முன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் தமிழ், ஆங்கிலத்தில் தனித்தனியாக சான்றிதழ் பெற வேண்டும். அவ்வாறு நகராட்சி மென்பொருள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், 2018 க்கு பின் பிறந்த குழந்தைகளுக்கு ஒரே சான்றிதழில் தமிழ், ஆங்கிலம் இடம் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது., என்றனர். இதனால் 2018 க்கு முன் பிறந்த குழந்தைகளுக்கும் ஒரே சான்றிதழில் இரு மொழிகளிலும் தகவல்கள் இடம் பெற்றுள்ள வகையில் சான்றிதழ்கள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.