/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துார்வாராத வஞ்சி ஓடையில் திரியும் பாம்புகள்; வீடுகளுக்குள் புகும் அவலம் போடி சுப்புராஜ் நகர் 8 வது வார்டு குடியிருப்போர் குமுறல்
/
துார்வாராத வஞ்சி ஓடையில் திரியும் பாம்புகள்; வீடுகளுக்குள் புகும் அவலம் போடி சுப்புராஜ் நகர் 8 வது வார்டு குடியிருப்போர் குமுறல்
துார்வாராத வஞ்சி ஓடையில் திரியும் பாம்புகள்; வீடுகளுக்குள் புகும் அவலம் போடி சுப்புராஜ் நகர் 8 வது வார்டு குடியிருப்போர் குமுறல்
துார்வாராத வஞ்சி ஓடையில் திரியும் பாம்புகள்; வீடுகளுக்குள் புகும் அவலம் போடி சுப்புராஜ் நகர் 8 வது வார்டு குடியிருப்போர் குமுறல்
ADDED : டிச 04, 2024 08:22 AM

போடி, : போடி நகராட்சி 8 வது வார்டு சுப்புராஜ் நகர் புதுக்காலனி, சந்தன மாரியம்மன் கோயில், வி.கே. ஹாஸ்டல் தெரு அருகே உள்ள வஞ்சி ஓடை பகுதியில் பாம்புகள், பன்றிகளுக்கு புகழிடமாகவும், கழிவுநீர் சங்கமிக்கும் கூவமாக மாறி உள்ளதால் சுகாதாரகேடு ஏற்படுகிறது. பாம்புகள் வீடுகளுக்குள் புகுவதால் மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.
போடி நகராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்ட சுப்புராஜ்நகர், சந்தன மாரியம்மன் கோயில் தெரு, சூர்யா நகர்1500 குடும்பங்கள் வசிக்கின்றனர். சுப்புராஜ்நகர் - புதுக் காலனி மெயின் ரோட்டில் வீடு கட்டும் கூட்டுறவு சங்க மூலம் வழங்கிய இடத்தில் வீடுகள் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாகியும், நகராட்சி வீட்டு வரி வசூலிக்காததால் குடிநீர் இணைப்பு பெற முடியாமல் சிரமம் அடைகின்றனர். பரமசிவன் கோயில் ரோடு, காமராஜ் வித்யாலயா பள்ளி அருகே ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் டூவீலரில் செல்வதற்கு கூட சிரமம் ஏற்படுகிறது. வஞ்சி ஓடையில் தேங்கியுள்ள கழிவு நீரால் சுகாதாரகேடு ஏற்படுவதாக சுப்புராஜ் நகர் புதுக்காலனி சந்தன மாரியம்மன் கோயில் தெரு குடியிருப்போர் நிர்வாகிகள் நாகலட்சுமி, பரமன், ராமராஜ், சந்திரன், பஞ்சம்மாள் ஆகியோர் கூறியதாவது :
வஞ்சி ஓடையால் சுகாதாரகேடு
சந்தன மாரியம்மன் கோயில் தெரு, வி.கே., ஹாஸ்டல் தெரு அருகே உள்ள வஞ்சி ஓடை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிறது. ஓடையில் முட்செடிகள் வளர்ந்தும், குப்பை தேக்கத்தால் மழைநீர் சீராக செல்ல முடியாமல் கழிவு நீர் கூவம் போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுத் தொல்லை அதிகரித்தும், துர்நாற்றத்தால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இச் சூழல் பாம்புகள், பன்றிகளுக்கு புகழிடமாக உள்ளது. சில நேரங்களில் பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதால் மக்கள் அச்சம் அடைகின்றனர். வஞ்சி ஓடையை ஆழப்படுத்தி தூர்வாரி தேங்கிய குப்பையை அகற்றவும், ஓடையின் இருபுறமும் தடுப்புச் சுவர் உயர்த்தி அமைத்திட வேண்டும். பாதாள சாக்கடை இணைப்பு வழங்காமலே அதற்கான வரி செலுத்த நகராட்சி நிர்வாகம் வலியுறுத்துகிறது.
குடிநீர் இணைப்பு பெற முடியாமல் சிரமம்
சுப்புராஜ்நகர் - புதுக்காலனி மெயின் ரோட்டில் வீடு கட்டும் கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கிய இடங்களில் கட்டிய சில வீடுகளுக்கு வீட்டு வரி வசூலிக்காததால் குடிநீர் இணைப்பு பெற முடியவில்லை. பட்டா வழங்க கோரி நகராட்சி, வருவாய், மாவட்ட நிர்வாகத்திடமும், வீட்டு வரி செலுத்த நகராட்சியிலும் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் வங்கி கடன் பெறவும், பத்திரப்பதிவு செய்ய முடியாமல், சில பகுதிகளில் குடிநீர் இணைப்பு பெற முடியாமல் சிரமம் அடைகின்றோம்.
தடுப்புச்சுவர் சீரமைக்க நடவடிக்கை தேவை
சுப்புராஜ் நகர் புதுக்காலனி, பரமசிவன் கோயில் தெரு, தனியார் பள்ளி, ஆதிபராசக்தி கோயில், 8, 9,10 வது வார்டுகளுக்கு செல்லும் முக்கிய பாதையாக வஞ்சி ஓடைப்பாலம் அமைந்து உள்ளது. இப்பகுதியில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பாலம் கட்டப்பட்டு 17 ஆண்டுகளுக்கு மேலாகிறது. வஞ்சி ஓடை பாலத்தில் அடிப்பகுதி முழுவதும் அரிப்பு ஏற்பட்டும், தடுப்புச் சுவர் சேதம் அடைந்து உள்ளது.
சீரமைக்காததால் கார்,வேன், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. சூர்யாநகர் - சின்னக்கரடு பாதையில் தடுப்புச்சுவர் இல்லாததால் மழைக் காலங்களில் வரும் மழைநீர் வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன் சேதம் அடைந்த வஞ்சி ஓடை பாலத்தை சீரமைத்து தடுப்புச்சுவர் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.