/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணி துவங்காததால் அவதி தேனி நகராட்சி 12வது வார்டு குடியிருப்போர் பரிதவிப்பு
/
சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணி துவங்காததால் அவதி தேனி நகராட்சி 12வது வார்டு குடியிருப்போர் பரிதவிப்பு
சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணி துவங்காததால் அவதி தேனி நகராட்சி 12வது வார்டு குடியிருப்போர் பரிதவிப்பு
சாக்கடை கால்வாய் சீரமைப்பு பணி துவங்காததால் அவதி தேனி நகராட்சி 12வது வார்டு குடியிருப்போர் பரிதவிப்பு
ADDED : பிப் 05, 2025 07:10 AM

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டில் சாக்காடை கால்வாய் சீரமைக்கும் பணி 3 மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் குடியிருப்போர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
தேனி நகராட்சிக்குட்பட்டு 33 வார்டுகள் உள்ளன. இதில் 12வது வார்டில் கருமாரியம்மன்தெரு, கோட்டைகளத் தெரு, நேருஜி தெரு, கபிலர் தெரு, குளத்து தெரு, பாரி தெரு, அதியமான் தெரு என 25 தெருக்கள் உள்ளன.
இவற்றில் குளத்துத்தெருவில் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் 300பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
தினமலர் நாளிதழ் குடியிருப்போர் குரல் பகுதிக்காக இப் பகுதி குடியிருப்போர் பாண்டியம்மாள், முனியம்மாள், சீத்தாலட்சுமி, மகேஸ்வரி கூறியதாவது:
இப்பகுதியில் சாக்கடைகள் மண் நிரம்பி இருந்தது. இதனால் புதிய சாக்கடை கட்டுவதற்காக 3 மாதங்களுக்கு முன் நகராட்சி பணிகளை துவக்கியது. இதற்காக சாக்கடையில் இருந்த கசடு, மண்ணை எடுத்து ரோட்டில் போட்டனர்.
இதுவரை கட்டுமான பணியை துவங்க வில்லை. சாக்கடை கழிவு நீர் அவர்கள் தோண்டிய பள்ளத்தில் தேங்கி நிற்பதால் மழை பெய்தால் ரோட்டில் கழிவுநீர் ஆறாய் ஓடுகிறது.
கட்டுமானப்பணிக்காக குறுக்கு தெருக்களில் இருந்து இணைப்பு பாலங்களை உடைத்தனர். இவற்றை சீரமைக்கவில்லை. இதனால் குறுக்கு தெருக்களில் உள்ளவர்கள் பலர் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். இதில் சிறுவர்கள், முதியவர்கள் காயமடைந்தது அதிகம்.
தேங்கும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் பலர் நோயால் பாதிக்கப்படுகின்றனர். சாக்கடை கட்டுமானத்தை முடிக்க கவுன்சிலர், நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினாலும் நடவடிக்கை இல்லை. குப்பை வாங்க நகராட்சி பணியாளர்கள் தினமும் வருவதில்லை. வீடுகளில் அதிகளவில் குப்பை சேருகிறது.
சிலர் குளத்துக்கரையில் குப்பை கொட்டும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இரவில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளதால் வேலை முடித்து வருவோர் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர்.
இப்பகுதிக்கு ரேஷன் கடை அருகே அமைந்துள்ளது.
ஆனால், பொருட்கள் சரிவர வழங்குவதில்லை. குறிப்பாக எண்ணெய், பருப்பு ஒரு மாதம் வழங்கினால், மறுமாதம் வழங்குவதில்லை. இதுபற்றி கேட்டால் சரியாக பதில் கூறுவதில்லை.
குறுக்கு தெருக்களில் சில இடங்களில் தெருவிளக்குகள் பொருத்தாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சில தினங்களுக்கு முன் அதிகாரிகள் பார்வையிடுவதற்காக வந்தனர். அவர்களிடம் குறைகளை கூறினால் அலட்சியமாக சென்றனர். இப்பகுதிக்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.