/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்கள் நீர் நிறுத்தப்பட்டதால் சிக்கல்
/
தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்கள் நீர் நிறுத்தப்பட்டதால் சிக்கல்
தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்கள் நீர் நிறுத்தப்பட்டதால் சிக்கல்
தண்ணீர் இன்றி கருகும் நெற்பயிர்கள் நீர் நிறுத்தப்பட்டதால் சிக்கல்
ADDED : மார் 30, 2025 03:27 AM
கூடலுார் : கூடலுார் கப்பாமடை பகுதியில் தண்ணீர் இன்றி நெற்பயிர்கள் கருகும் அபாய நிலை அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கூடலுாரில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இரு போக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. தற்போது 2ம் போகத்திற்கான அறுவடை தீவிரமடைந்துள்ளது. ஒழுகுபுளி, தாமரைக்குளம், ஒட்டான்குளம், வெட்டுக்காடு, காஞ்சிமரத்துறை உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை முடியும் தருவாயில் உள்ளது. இரண்டாம் போக நெல் அறுவடை முடிந்தவுடன் வழக்கமாக பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீர் நிறுத்தப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் விவசாயத்திற்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்கு மட்டும் 105 கன அடி நீர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் ஜூனில் துவங்கும் முதல் போக சாகுபடிக்காக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.
இந்நிலையில் கூடலுார் கப்பாமடை பகுதியில் உள்ள சாமி வாய்க்காலை நம்பி 50 ஏக்கருக்கும் மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது கதிர் விட்டு நெற்பயிர்கள் பச்சை பசேலென்று காட்சி தருகின்றன. இங்கு அறுவடை செய்ய இன்னும் 20 நாட்களுக்கு மேலாகும். ஆனால் தற்போது அணையில் நீர் நிறுத்தப்பட்டுள்ளதால் இப்பகுதியில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வரவில்லை.
தண்ணீர் இன்றி நெற் பயிர்கள் கருகி நெல்பதறு ஆகமாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதிக்கு சாமி வாய்க்கால் மூலம் இன்னும் ஒரு வாரத்திற்கு தண்ணீர் திறந்து விட்டால் மட்டுமே 50 ஏக்கர் பரப்பில் உள்ள நெற்பயிர்களை காப்பாற்ற முடியும். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள்வலியுறுத்தியுள்ளனர்.