ADDED : மே 30, 2025 03:30 AM
கம்பம்: மேகமலை பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் சண்முகா நதி அணையின் நீர் மட்டம் மெள்ள மெள்ள உயர்ந்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் மாவட்டம் முழுவதும் மழை பரவலாக பெய்து வருகிறது.
மேகமலை, ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு பகுதிகளில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் சண்முகா நதி அணை நீர்மட்டம் மெள்ள மெள்ள உயர்ந்து வருகிறது.
அணையின் முழு கொள்ளளவு 52.5 அடியாகும். தற்போது அணை நீர்மட்டம் 44.30 அடியாக உள்ளது.
அணைக்கு விநாடிக்கு 12 கன அடி வரத்து உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு 41 அடியாக இருந்தது. தொடர்ந்து சாரல் இருப்பதால் அணையின் நீர்மட்டம் மெள்ள உயர்ந்து வருகிறது.
நீர்வளத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, 'தென்மேற்கு பருவ மழை காலங்களில் சண்முகா நதி அணைக்கு தண்ணீர் வரத்து இருக்காது .
வடகிழக்கு பருவமழை காலங்களில் மட்டுமே அணை நிரம்பும். ஆனால் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழையால் நீர் மட்டம் மெள்ள மெள்ள உயர்ந்து வருகிறது.
இதே நிலை நீடித்தால் 2 வாரங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும். தொடர்ந்து அக்டோபரில் வடகிழக்கு பருவ மழையும் பெய்ய உள்ளதால், இனி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவிலேயே இருக்கும்,' என்கின்றனர்.