/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப்பெரியாறு அணையில் ஆர்.ஓ.வி., ஆய்வு நேற்று மாலையுடன் நிறைவு
/
முல்லைப்பெரியாறு அணையில் ஆர்.ஓ.வி., ஆய்வு நேற்று மாலையுடன் நிறைவு
முல்லைப்பெரியாறு அணையில் ஆர்.ஓ.வி., ஆய்வு நேற்று மாலையுடன் நிறைவு
முல்லைப்பெரியாறு அணையில் ஆர்.ஓ.வி., ஆய்வு நேற்று மாலையுடன் நிறைவு
ADDED : டிச 29, 2025 06:45 AM

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி நீரில் மூழ்கியிருக்கும் அணைப் பகுதியின் பலம் குறித்து தொலைவில் இருந்து இயக்கப்படும் தானியங்கி இயந்திர கருவி (ஆர்.ஓ.வி.) மூலம் கடந்த ஒரு வாரமாக நடந்த ஆய்வு பணி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் சாகுபடி நிலங்கள் உள்ளன.
அணையில் தேங்கியிருக்கும் நீரை தமிழகம் பயன்படுத்திக் கொள்ள முழு அதிகாரம் இருந்த போதிலும் அணை கேரளாவில் அமைந்துள்ளதால் இரு மாநிலங்களுக்கிடையே நீர்மட்டம் உயர்த்துவது தொடர்பான பிரச்னை தொடர்ந்து இருக்கிறது.
உத்தரவு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில் ஜெயின் தலைமையில் மத்திய கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது. இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்கிறது.
இக்குழுவின் ஆலோசனையின் படி நீரில் மூழ்கியிருக்கும் அணைப் பகுதியின் பலம் குறித்து ஆய்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆய்வு அதன் அடிப்படையில் மத்திய மண்ணியல் ஆய்வு நிலைய ஆராய்ச்சியாளர்கள் மணிஷ்குப்தா, சர்வேதி, செந்தில், விஜய், ஜாலே லிங்கசாமி, தீபக்குமார் சர்மா ஆகியோர் கொண்ட குழு ஆர்.ஓ.வி., இயந்திரத்தின் மூலம் ஆய்வுப் பணியை டிச., 22ல் துவக்கினர்.
1200 அடி நீளமுள்ள பெரியாறு அணை 100 அடி வீதமாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகங்களாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு பாகமாக நீருக்குள் அணையின் அடிப்பாகத்தை ஆர்.ஓ.வி., இயந்திரம் மூலம் துல்லியமாக படம் எடுக்கப்பட்டது.
ஆய்வுப்பணி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 85 அடி ஆழம் வரை முழுமையாக அணைப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இதன் ஆய்வு அறிக்கையை இக்குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.
முல்லைப்பெரியாறு அணை செயற்பொறியாளர் செல்வம், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால், உதவி பொறியாளர்கள் மகேந்திரன், தருண் கௌதம், பாலசேகர், கேரள நீர்வளத்துறை செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

