/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.11.56 கோடி மோசடி
/
இரட்டிப்பு பணம் தருவதாக ரூ.11.56 கோடி மோசடி
ADDED : பிப் 03, 2024 12:29 AM
தேனி:தேனியில் பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி நான்கு சிறுசேமிப்பு திட்ட சீட்டு நடத்தி 561 பேரை சந்தாதாரர்களாக இணைத்து 11.56 கோடி ரூபாய் மோசடி செய்த பொம்மையக்கவுண்டன்பட்டி பெருமாள் கோயில் தெரு ராஜாமணி, அதேபகுதி பள்ளி ஓடைத்தெரு மலர்விழி, தமிழரசி, சுக்குவாடன்பட்டி ஜெயப்பிரியா ஆகிய நால்வர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி சரண்யா 36. இவரிடம் கடந்த 2000ம் ஆண்டில் ராஜாமணி, மலர்விழி பழகினர்.
சீட்டு நடத்தி வருவதாகவும், மாதந்தோறும் 200 ரூபாய் செலுத்தினால் 36 மாதங்களில் 7200 ரூபாய் செலுத்திய பின், 37 வது மாதத்தில் இரட்டிப்பு தொகை வழங்குகிறோம் என்றனர். இதனை நம்பிய சரண்யா பணத்தை கட்டியுள்ளார். இதுபோல பொம்மையக்கவுண்டன்பட்டி, பூதிப்புரத்தை சேர்ந்த 561 சந்தாரர்களை ராஜாமணி, மலர்விழி, தமிழரசி, ஜெயப்பிரியா ஆகியோர் தாங்கள் நடத்திய நான்கு சிறுசேமிப்பு சீட்டு திட்டங்களில் சேர்த்து 5 கோடியே 71 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளனர்.
ஆனால் தாங்கள் கூறியபடி 561 சந்தாதாரர்களுக்கு இரட்டிப்பு பணத்தை வழங்கவில்லை. அப்பணத்தின் மதிப்பு தற்போது11 கோடியே 56 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஆகும். இவ்வாறு 561 சந்தாதாரர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அவர்களின் புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாயாராஜலட்சுமி, எஸ்.ஐ., லதா ஆகியோர், ராஜாமணி, மலர்விழி, தமிழரசி, ஜெயப்பிரியா ஆகிய நால்வர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

