/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சபரிமலை, தைப்பூசத்திற்கு கருப்பு, காவி வேட்டி விற்பனை அமோகம்: உற்பத்தி விறுவிறுப்பால் நெசவாளர்கள் மகிழ்ச்சி
/
சபரிமலை, தைப்பூசத்திற்கு கருப்பு, காவி வேட்டி விற்பனை அமோகம்: உற்பத்தி விறுவிறுப்பால் நெசவாளர்கள் மகிழ்ச்சி
சபரிமலை, தைப்பூசத்திற்கு கருப்பு, காவி வேட்டி விற்பனை அமோகம்: உற்பத்தி விறுவிறுப்பால் நெசவாளர்கள் மகிழ்ச்சி
சபரிமலை, தைப்பூசத்திற்கு கருப்பு, காவி வேட்டி விற்பனை அமோகம்: உற்பத்தி விறுவிறுப்பால் நெசவாளர்கள் மகிழ்ச்சி
ADDED : நவ 14, 2025 04:59 AM

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் பக்தர்கள் காப்பு கட்டி சபரிமலை ஐயப்பனுக்கு விரதம் மேற்கொள்வர். தைப்பூசத்தை முன்னிட்டு பழநி உட்பட அறுபடை வீடுகளில் உள்ள கோயில்களுக்கும் விரதத்தை துவக்கி விடுவர். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் துவங்கும் விரத நாட்களில் கருப்பு, காவி, பச்சை உள்ளிட்ட கலர் வேட்டிகளை அணிந்து கொள்வர்.
இதனால் இக் காலகட்டங்களில் லட்சக்கணக்கான வேட்டிகள், துண்டுகள் விற்பனையாகும். கலர் வேட்டிகள் உற்பத்தியில் பல ஆண்டுகளாக சக்கம்பட்டி நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். சீசனுக்கு தேவைப்படும் வேட்டிகளை உற்பத்தியாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்கின்றனர். தற்போது இப்பகுதியில் கைத்தறிகளில் கலர் வேட்டிகள் உற்பத்தி இல்லை. விசைத்தறிகளில் உற்பத்தியாகும் கலர் வேட்டிகள் ஈரோடு ஜவுளி சந்தைக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். சக்கம்பட்டி பகுதியில் உற்பத்தியாளர்கள், வியபாரிகளிடம் நேரடியாகவும் கொள்முதல் செய்கின்றனர்.
கலர் வேட்டிகள் உற்பத்தியாளர் சக்கம்பட்டியை சேர்ந்த நாகராஜ் கூறியதாவது: விசைத்தறிகளில் தற்போது கருப்பு கலரில் எம்.எல்.ஏ., பேன்சி, குண்டஞ்சி, பரமாஸ், ஆர்.எம்.,பேடு வகை வேட்டிகள் உற்பத்தியாகிறது. 20, 26, 30ம் நம்பர் நூல்களில் உற்பத்தியாகும் 2 மீட்டர் நீளம் வேட்டிகள் ரகத்திற்கு தக்கபடி ரூ.120 முதல் ரூ.160 வரையிலான விலையில் உள்ளது. தினமும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உற்பத்தியாகும் வேட்டிகள் ஈரோடு ஜவுளி சந்தையில் இருந்து தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களின் பல ஊர்களுக்கு விற்பனைக்கு செல்கிறது. தற்போது வேட்டிகளுக்கான தேவை அதிகம் உள்ளது. கூடுதல் உற்பத்திக்கான தொழிலாளர்கள் இல்லாததால் உற்பத்தி குறியீட்டை எட்ட முடியவில்லை. கடந்த காலங்களில் தினமும் 15 ஆயிரம் எண்ணிக்கையில் வேட்டிகள் உற்பத்தியானது. தற்போது உற்பத்தி 3ல் ஒரு பங்காக குறைந்துள்ளது. கருப்பு கலர் வேட்டிகள் உற்பத்தி இன்னும் ஒரு சில வாரங்களில் குறைந்து விடும். தொடர்ந்து காவி, பச்சை, சிவப்பு உள்ளிட்ட கலர் வேட்டிகள் உற்பத்தி அதிகமாகும். உற்பத்தியாகும் வேட்டிகள் தற்போது தேக்கமின்றி விற்பனையாவதால் உற்பத்தியாளர்கள் நெசவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

