/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனியில் களைகட்டும் கலைத்திருவிழா போட்டிகள்; திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி மாணவர்கள்
/
தேனியில் களைகட்டும் கலைத்திருவிழா போட்டிகள்; திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி மாணவர்கள்
தேனியில் களைகட்டும் கலைத்திருவிழா போட்டிகள்; திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி மாணவர்கள்
தேனியில் களைகட்டும் கலைத்திருவிழா போட்டிகள்; திறமைகளை வெளிப்படுத்திய பள்ளி மாணவர்கள்
ADDED : நவ 02, 2025 05:58 AM

மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி மற்ற திறனையும் வெளிக்காட்டிட வேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகள் முதலில் பள்ளி அளவில் நடத்தி இதில் வெற்றி பெறுபவர்கள் வட்டார போட்டியில் பங்கேற்கின்றனர். அதிலும் வெற்றி பெற்று தேர்வாகும் மாணவர்கள் மாவட்ட போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இப் போட்டிகள் அரசு, உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த முதலாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
இதில் பேச்சு, கட்டுரை, கவிதை, பாட்டுபாடுதல், வீதி நாடகம், வில்லுபாட்டு, தனிநபர் நடனம், குழு நடனம், பரதநாட்டியம், இசைக்கருவி மீட்டுதல், மாறுவேடம், தனிநபர் நாடகம், சைகை மொழி நாடகம், நுண்திறன்களான ஓவியம் தீட்டுதல், மணற்சிற்பம், களிமண்சிற்பம், பானை ஓவியம், காய்கறிகளில் சிற்பம் வடிவமைத்தல், ரங்கோலி, ஓவியம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்ட அளவிலான போட்டிகள் வீரபாண்டி சவுராஷ்டிரா கலை அறிவியல் கல்லுாரியில் அக்.,29ல் துவங்கி நவ.,4 வரை நடக்கிறது.
இதில் வெற்றி பெறுவோர் மாநில போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டிகளில் மாணவர்கள் ஒருவருக்கு கொருவர் யாரும் சளைத்தவர்கள் இல்லை எனும் விதத்தில் அனைத்து போட்டிகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். மாணவர்களின் திறமைகளை கண்டு யாரை தேர்வு செய்வது, யாரை விடுவது என நடுவர்களே கொஞ்சம் திக்குமுக்காடிப்போகின்றனர்.
போட்டிகள் நடந்த வளாகம் ஏதோ திருவிழா நடப்பதை போன்றே இருந்தது. துருதுரு வென நகர்ந்து கொண்டிருந்த மாணவர்கள், போட்டி நடக்கும் இடத்தில் அடுத்தது தங்கள் வரிசைதான் என காத்திருந்த அணியினர், அழைத்து வந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள் என விழா நடத்த வளாகம் முழுவதும் மகிழ்ச்சி வெள்ளமாக இருந்தது. மாணவர்கள் போட்டிகளுக்கு தயாரன விதம், பயிற்சி பற்றி பகிர்ந்து கொண்டனர்.
நாட்டியத்தால் படிப்பிலும் கவனம் தாரியா, பிளஸ் 2, எஸ்.யூ.எம்., மேல்நிலைநிலைப்பள்ளி, ராயப்பன்பட்டி: நடனம் ஆடுவது பிடிக்கும். ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து முறையாக பரதம் கற்க துவங்கினேன். விடுமுறை நாட்களில் பரதம் கற்று வந்தேன். பள்ளி சார்பில் குழுவினராக பரதம் போட்டியில் பங்கேற்றோம். குழுவினருடன் தினமும் வகுப்புகள் முடிந்த பின் பயிற்சி மேற்கொள்வோம்.
ஆசிரியர்கள் பயிற்சி வழங்குவார்கள். நாட்டியத்திலும், படிப்பிலும் ஒரே மாதிரியாக கவனம் செலுத்துகிறேன். மாவட்ட போட்டியில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தி உள்ளோம். பெற்றோர்கள் உற்சாகப்படுத்துகின்றனர்.
இயல்பாக நடிப்பேன் ஜெய்காளீஸ்வரன், 10ம் வகுப்பு, நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, தேனி: சிறுவயதில் இருந்தே நடிப்பது பிடிக்கும். கலைத்திருவிழாவில் வீதி நாடகத்தில் நடித்தேன். கடந்தாண்டு மற்றொரு போட்டியில் மாநில அளவில் சென்றேன். பள்ளி அளவிலான போட்டி நடந்த போதில் இருந்தே கூடுதலாக நேரம் செலவு செய்து வசனங்கள், சொற்களை உள்வாங்கி கொண்டேன்.
பள்ளி முடிந்ததும் குழுவினருடன் வீதி நாடகத்திற்கு ஒத்திகைகள் பார்ப்போம். மாவட்ட போட்டிக்காக ஒரு மாதமாக தொடர் பயிற்சி மேற்கொண்டோம். சில நேரங்களில் வீட்டில் வசனங்களை பேசி பயிற்சி பெற்று இயல்பாக நடிப்பேன். பேச்சு போட்டிகளில் நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன்.
மரம் வெட்டுவதை தவிர்க்க விழிப்புணர்வு ஹர்சினி,10ம் வகுப்பு, கஸ்துாரிபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காமயகவுண்டன்பட்டி: குழு நடனம் போட்டியில் பங்கேற்றேன். பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எங்கள் குழுவினர் நடனம் ஆடினோம். மரங்களை அழிப்பதால் புவி வெப்பமடைவது அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசு அடைந்து அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. மரங்கள் அதிக அளவில் நடவு செய்து பராமரிக்க வேண்டும், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில் எங்கள் நடன பாடல் இருந்தது. குழு நடனத்தில் வெற்றி பெறுவோம்.
மணற்சிற்பத்தில் ஆர்வம் நதீஸ், பிளஸ் 1, கிருஷ்ணய்யர் மேல்நிலைப்பள்ளி, சின்னமனுார்: வகுப்பில் ஓவியம் நன்றாக வரைவேன். ஆசிரியர்கள் ஊக்குவிப்பால் மணற்சிற்பம் வரைய துவங்கினேன். இரு ஆண்டுகளாக மணற்சிற்ப பயிற்சி பெற்று வருகிறேன். ரங்ககோலி வரைவேன். மணற்சிற்பம் வரையும் போது பல இடங்களில் நுணுக்கமாக வரைய வேண்டும்.
இவற்றை நிதானமாக வரைவேன். அவசர கதியில் மணற்சிற்பம் செய்தால் சிற்பம் அழகு குறைந்து விடும். வரைவதற்கு ஆசிரிகள் பயிற்சி வழங்குகிறார்கள். தொடர்ந்து பயிற்சி பெற்று இன்னும் நன்றாக மணற்சிற்பங்கள் செதுக்குவேன்.
பார்த்தவு டன் வ ரைந்து விடுவேன் நவதன்யஸ்ரீ, பிளஸ் 2, என்.எஸ்.கே.பி., பள்ளி, கூடலுார்: எந்த ஒரு பொருளை பார்த்தாலும் அதனை அப்படியே வரைந்து விடுவேன். புதிதாக ஏதாவது வரைய முயற்சிகள் செய்தேன். அப்போது காய்கறிகளில் உருவங்களை செதுக்குவது பிடித்தது. சில ஆண்டுகளாக காய்கறிகளில் ஓ சிற்பங்களை செதுக்கி வருகிறேன். பீட்ரூட், தர்பூசணி, கேரட், குடைமிளகாய், முள்ளங்கி, கறிவேப்பிலை, உள்ளிட்ட காய்கறிகளை சிற்பங்கள் செதுக்க பயன் படுத்துகிறேன். இவற்றில் பூக்கள், ஓவியங்கள் செதுக்கு கின்றேன்.
சிலைகள் வடிவமைப்பு விஷ்ணு, 9ம் வகுப்பு, பச்சையப்பா நாடார் மேல்நிலைப்பள்ளி, காமாட்சிபுரம்: சிறுவயதில் இருந்தே களிமண், செம்மண் பயன்படுத்தி சிலைகள் செய்வதில் ஆர்வம். தற்போது போட்டியில் எளிதாக சிலைகள் செய்கிறேன்.
சிலைகள் செய்ய வயல்கள், நீர்நிலைகளில் இருந்து களிமண், செம்மண் எடுத்து வருகிறேன்.
மான், சிங்கம், முயல், மாடு, கிளி, இயற்கை விவசாயம் போன்ற சிலைகள் செய்வேன். மாவட்ட போட்டியில் விவசாயம் தொடர்பான சிலைகள் செய்துள்ளேன். என்றார்.

