/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாய மின் இணைப்புகளுக்கான தனி வழித்தடப் பணிகள் தீவிரம்
/
விவசாய மின் இணைப்புகளுக்கான தனி வழித்தடப் பணிகள் தீவிரம்
விவசாய மின் இணைப்புகளுக்கான தனி வழித்தடப் பணிகள் தீவிரம்
விவசாய மின் இணைப்புகளுக்கான தனி வழித்தடப் பணிகள் தீவிரம்
ADDED : நவ 15, 2024 05:29 AM
தேனி: மாவட்டம் முழுவதும் விவசாயம், வீட்டுஉபயோக மின் இணைப்புக்களை முறைப்படுத்தி விவசாயத்திற்கு தனி வழித்தடம் அமைக்கும் பணிகளை வாரியத்தின் உத்தரவுப்படி தேனி கோட்ட மின்வாரியம் தீவிரப்படுத்தி உள்ளது.
விவசாயத்திற்கான மின் இணைப்பை சிலர் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துவது அதிகரித்து வந்தது.
இதுகுறித்து மின்நுகர்வோர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள், 'வேளாண் பயன்பாட்டிற்கான மின் வினியோகத்தில் பற்றாக்குறை, மின்தடை, சீரான மின்சப்ளை இல்லாமை போன்ற காரணங்களால் மகசூல் பாதிக்கிறது என, தொடர்ந்து புகார்கள் தெரிவித்தனர்.
இதனால் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் இம்மாதிரியான விபரங்களை சேகரித்த மின்வாரியம், இப்புகார்களை பரிசீலித்தது.
பின் அனைத்து மாவட்டங்களிலும் விவசாய மின் இணைப்பு, வீட்டு உபயோகத்திற்கான மின் இணைப்பு, வணிக பயன்பாட்டிற்கான மின் இணைப்புக்களை ஆய்வு செய்து விவசாய மின் இணைப்புகளை மட்டும் பிரித்து, அதற்கு மட்டும் தனி வழித்தடங்கள் அமைத்து சீரான மின் வினியோகத்தை உறுதி செய்திட வேண்டும் என, அரசு உத்தரவிட்டது. இதனால் தேனி மின்வாரிய கோட்டத்தில் உள்ள தேனி டிவிஷனில் உள்ள தேனி நகர், ஊரகம், போடிராசிங்காபுரம், போடி ஆகிய பகுதிகளிலும், பெரியகுளம் டிவிஷனில் உள்ள ஆண்டிபட்டி மேற்கு, கிழக்கு, பெரியகுளம் கிழக்கு, பெரியகுளம் மேற்கு பகுதிகளிலும், சின்னமனுார் டிவிஷனில் காமாட்சிபுரம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் ஆகிய பகுதிகள் என 12 பிரிவுகளிலும் விவசாய வழித்தடங்களை தனியாக பிரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
மின்வாரிய அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'இத்திட்டத்தின் நோக்கமே விவசாய, வேளாண் பணிகளுக்கும், உற்பத்திக்கும் எவ்வித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதுதான்.
இதனால் தீவிரமாக 2025 ஜனவரிக்குள் இப்பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் மின் அழுத்தம் ஏற்படாது.
இதில் மேகமலை, கூடலுார், அகமலை, பெரியகுளம் அருகில் உள்ள முருகமலை பகுதிகளை ஒட்டியுள்ள நிலங்களுக்கான விவசாய மின் இணைப்புகள் மறு ஆய்வு செய்து முறைப்படுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன' என்றார்.