/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
110 விவசாயிகளுக்கு பட்டு வளர்ச்சித்துறை மானியம்
/
110 விவசாயிகளுக்கு பட்டு வளர்ச்சித்துறை மானியம்
ADDED : நவ 07, 2024 02:22 AM
தேனி: மாவட்டத்தில் பட்டு வளர்ப்பு பரப்பை அதிகரிக்க 50 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம், 60 விவசாயிகளுக்கு ரூ.3.5 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.
தேனி மாவட்டம் பட்டு கூடு உற்பத்தியில் மாநில அளவில் முக்கிய மாவட்டமாக திகழ்கிறது. சின்னமனுார், மயிலாடும்பாறை, போடி, தேனி பகுதிகளில் 2ஆயிரம் ஏக்கரில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வி1, எம்.ஆர்.2 ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு ஏக்கரில் மல்பெரி சாகுபடி, பட்டு புழு வளர்ப்பு மூலம் மாதந்தோறும் விவசாயிகள் ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகின்றனர். மாவட்டத்தில் வெண்பட்டு பட்டுக்கூடுகள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை கிலோ ரூ.450 முதல் ரூ.550 வரை விற்பனையாகிறது.
மல்பெரி செடி, பட்டு கூடு உற்பத்தியை பெருக்க மத்திய அரசு சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி 2 ஏக்கர் சாகுபடி செய்த 50 விவசாயிகளுக்கு மானியமாக தலா ரூ.5லட்சமும், ஒரு ஏக்கர் சாகுபடி செய்த 60 விவசாயிகளுக்கு தலா ரூ.3.5 லட்சமும் மானியம் வழங்கப்பட உள்ளது. இவை பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் அருகில் உள்ள பட்டுவளர்ச்சித்துறைஅலுவலகத்தையோ, தேனி முத்துத்தேவன்பட்டியில் உள்ள பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தையோ அணுகலாம்.