/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மதிப்பீட்டுக் குளறுபடியால் நிறத்தப்பட்ட பாலப்பணி சில்வார்பட்டி விவசாயிகள் அவதி
/
மதிப்பீட்டுக் குளறுபடியால் நிறத்தப்பட்ட பாலப்பணி சில்வார்பட்டி விவசாயிகள் அவதி
மதிப்பீட்டுக் குளறுபடியால் நிறத்தப்பட்ட பாலப்பணி சில்வார்பட்டி விவசாயிகள் அவதி
மதிப்பீட்டுக் குளறுபடியால் நிறத்தப்பட்ட பாலப்பணி சில்வார்பட்டி விவசாயிகள் அவதி
ADDED : ஏப் 13, 2025 05:22 AM

தேவதானப்பட்டி : சில்வார்பட்டி ஊராட்சியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் ஓடைப்பகுதியில் பாலம் கட்டுமானப்பணியில் பணி தொடர்ந்தால் கூடுதல் செலவு ஏற்படும் என கருதி பணியை அரைகுறையாக பாதியில் விட்டு சென்றனர்.
பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி, ஊராட்சி நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, சமத்துவபுரம், தர்மலிங்கபுரம், கதிரப்பன்பட்டி கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு 10 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.
இங்குள்ள அணை ஓடைப்பகுதியில் கிழக்கு பகுதியில் 60 ஏக்கர் விளை நிலங்களில் வெற்றிலைக் கொடிக்கால், தென்னை, வாழை, கீரை பயிரிடப்படுகின்றன.
இப் பகுதி நிலங்களுக்கு ஏராளமான விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் தினமும் சென்று வருகின்றனர். ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கும் அணை ஓடைப்பகுதியை கடந்து செல்ல வேண்டும்.
மழை பெய்தாலே ஓடையில் அதிக வெள்ள பெருக்கு ஏற்படும். இதனால் ஓடையை கடப்பதற்கு பாலம் கட்ட வேண்டும் என தொடர்ந்து கோரி வருகின்றனர்.
விவசாயிகள் முயற்சிக்கு பலன்
சில்வார்பட்டி அணை ஓடையை ஒன்றிய பொறியாளர்கள் ஆய்வு செய்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2022 -20-23 ல் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டுமானப்பணி துவங்கியது.
2023 டிசம்பருக்குள் பாலம் பணியை முடிக்க வேண்டும். விரைவாக துவங்கிய பாலம் பணியில் ஓடையின் நடுவே நான்கு பில்லர்கள் அமைக்கப்பட்ட நிலையில் பணியை நிறுத்தி விட்டனர்.
குறைந்த மதிப்பீடு தயாரிப்பு
இது குறித்து விசாரிக்கையில், ஒன்றிய இன்ஜினியர் பாலத்திற்கான திட்ட மதிப்பீடு குறைவாக தயாரித்ததாகவும், பணி நடைபெற்ற போது கூடுதல் செலவு ஏற்படும் என கருதி ஒப்பந்ததாரர் பணியை நிறுத்தி விட்டார். இதனால் பாலத்திற்கு துாண்கள் அமைத்த நிலையில் அரை,குறையாக விட்டு சென்றனர். மண் பாதையாக இருந்த போது கூட விவசாயிகள் சிரமம் இன்றி ஓடையை கடந்து சென்றனர். பாலம் கட்டுவதாக கூறி பூமிக்கு அடியில் கிடந்த மண்ணை பாதையில் கொட்டி 'அம்போ' என விட்டு விட்டனர். இதனால் லேசான துாரல் துாறினாலே இப் பாதை சேறும் சகதியாக மாறிவிடும். இவ் வழியாக வரும் மக்கள் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எப்போது பணி முடியும், பாதை பிரச்னை தீர்வாகும் என தவியாய் தவிக்கின்றனர். விவசாயிகள் கூறியதாவது:
இடுப்பு எலும்பு முறிந்தது
துரைப்பாண்டி, விவசாயி, சில்வார்பட்டி: பாலம் கட்டுமானப்பணி முடியாததால் கடந்தாண்டு மழை காலத்தில் வேலை செய்து விட்டு திரும்பும் போது வழுக்கி விழுந்து எனது இடுப்பு எலும்பு முறிந்தது. தற்போது நான் சாய்வாக நடந்து செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளேன். பாலம் பணியை நிறைவு செய்ய ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலம் கட்டி முடிக்கவேண்டும்
ஸ்டாலின், விவசாயி,சில்வார்பட்டி: புதுப்புது டெக்னாலஜி வளர்ந்து வரும் நிலையில், ஒட்டு மொத்த ஊர் பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பாக ஓடை பாலம் கட்டுமானப்பணி முடியாதது வேதனையளிக்கிறது. 60 சதவீதம் முடிந்துள்ள பாலம் பணியை நிறைவு செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.
பாலகிருஷ்ணன் பி.டி.ஓ., பெரியகுளம், 'ஓடை பாலத்திற்கு இன்ஜினியர் மூலம் மதிப்பீடு தயார் செய்து எஞ்சிய பணிகளை ஒன்றிய பொது நிதியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உள்ளோம்.' என்றார்.
மாவட்ட திட்ட அலுவலர் அபிதா ஹனிப், 'விரைவில் பாலம் பணி தொடர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.
'பயன்பாட்டிற்கு வரவேண்டும்'
தீர்வு: சில்வார்பட்டி விவசாயிகளின் வாழ்வாதாரமான விளை நிலங்களுக்கு செல்வதற்கான பாலம் பணி முடங்கியுள்ளதை காலம் கடத்தாமல் பாலம் கட்டுமானப்பணியை முழுமையாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.