/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கண்மாய்களில் கரம்பை மண் கடத்தல்... அதிகரிப்பு: நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
/
கண்மாய்களில் கரம்பை மண் கடத்தல்... அதிகரிப்பு: நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
கண்மாய்களில் கரம்பை மண் கடத்தல்... அதிகரிப்பு: நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
கண்மாய்களில் கரம்பை மண் கடத்தல்... அதிகரிப்பு: நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம்
ADDED : அக் 07, 2025 04:38 AM
தேனி: மாவட்டத்தில் உள்ள கண்மாய், குளங்களில் அனுமதியின்றி கரம்பை மண் கடத்தல் தொடர்வதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மண் கடத்தப்படுவதை அரசியல் கடசியினர் அழுத்தம் காரணமாக போலீசாரும், வருவாய்த் துறையினரும் கண்டும் காணாது போல் இருப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். மாவட்டம் முழுவதும் கண்மாய், குளங்களில் வண்டல், கரம்பை மண் எடுக்க வருவாய் துறை, பொதுப்பணித்துறை முறையான அறிவிப்பு வெளியிட்டு குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்குகிறது.
ஆனால் பல இடங்களில் அனுமதிக்கப்பட்ட கால அளவு முடிந்தும் மண் திருட்டு நடக்கிறது. ஆண்டிபட்டி தாலுகா கண்டமனுார் பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள், பாலசமுத்திரம், மறவபட்டி கண்மாய்களில் சட்ட விரோதமாக கரம்பை மண் அள்ளுவது தொடர்கிறது. க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பாலசமுத்திரம் கண்மாயில் டிப்பர் லாரிகள் மூலம் கரம்பை மண் அள்ளுவதும், நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை விட கூடுதலான அளவுகளில் எடுப்பது என பல நாட்கள் மண் கொள்ளை தொடர்கதையாக உள்ளது.
இதனை வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் மண் கடத்தலை தடுத்தால், அரசியல்வாதிகள் குறுக்கீடு, மிரட்டல் என இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் மண் கடத்தல் புகார் வந்தாலும் அதிகாரிகள் கண்டும், காணாமல் விட்டுவிடுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இலவசமாக விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கரம்பை மண் தொடர்ந்து கிடைக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை எடுப்பது அவசியம்.
விவசாய சங்க நிர்வாகிள் சிலர் கூறியதாவது: அனைத்து தாலுகாக்களிலும் பொதுப்பணித்துறை, உள்ளாட்சிகள் நிர்வகிக்கும் கண்மாய், குளங்களில் மாவட்ட நிர்வாகம் இலவசமாக வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஆனால் கனிமவளத்துறையில் அனுமதி பெற்றும், கூடுதல் நாட்களாக கரம்பை அள்ளும் அரசியல் பின்புலம் உள்ளவர்கள், கரம்பை கடத்துவது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாத அதிகாரிகளை கொண்ட தனிப்படை அமைத்து கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.