ADDED : ஜன 07, 2025 05:26 AM
சின்னமனூர்: பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்குவதற்கென செங்கரும்பு கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. தோட்டங்களில் செங்கரும்பை வெட்டி லாரிகளில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தைப்பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, செங்கரும்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
மாவட்டத்தில் சின்னமனூர், தேனி, பெரிய குளம் பகுதிகளில் மட்டுமே செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த 3 ஊர்களிலும் விவசாயிகளிடம் கொள்முதல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதன்படி சின்னமனூரில் பைபாஸ் ரோடு, மார்க்கையன்கோட்டை ரோடு, எள்ளுக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் செங்கரும்பு அறுவடை செய்து லாரிகளில் ஏற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு கரும்பின் விலை ரூ.35 என அரசு நிர்ணயம் செய்துள்ளது. இதில் ஏற்று கூலி, இறக்கு கூலி உள்ளிட்ட செலவுகள் அடங்கும்.
ஒவ்வொரு விவசாயியிடமிருந்தும் குறைந்தது 500 முதல் ஆயிரம் கட்டுக்கள் ( ஒரு கட்டு 10 கரும்பு) கொள்முதல் செய்யப்படுகிறது. சின்னமனூரில் அதிக கரும்புகள் கொள் முதல் செய்யப்படுகிறது. இந்த பணியில் வேளாண் மற்றும் கூட்டுறவு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.