/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரம்ஜான் பண்டிகை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
/
ரம்ஜான் பண்டிகை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
ADDED : ஏப் 01, 2025 05:27 AM

இஸ்லாமியர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாட்டம்
தேனி: இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகையை முன்னிட்டு, நேற்று மாவட்டத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் இருந்து ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் முன்னிலையில் ஊர்வலமாக சென்று சிறப்பு தொழுகைகள் நடந்தன.
தேனி அல்லிநகரம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஜமாத் தலைவர் ஜியாவுதீன் தலைமையில், செயலாளர் அப்பாஸ், பொருளாளர் ஹக்கீம், துணைத் தலைவர் ரபீக்ராஜா, இணைச் செயலாளர் ஜாஹீர்உசேன், துணைச் செயலாளர் சுல்தான் முன்னிலையில் ரம்ஜான் ஊர்வலம் துவங்கியது. வி.எம்.சாவடி, பெரியகுளம் ரோடு,நேருசிலை வழியாக கம்பம் ரோடு பெரிய பள்ளிவாசலை அடைந்தது. அங்கு ரமலான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தேனி மாநகர் ஜமாத் கமிட்டி சார்பில், பங்களாமேட்டில் இருந்து துவங்கிய ஊர்வலம் சுப்பன்செட்டி தெரு புதுப் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. கமிட்டித் தலைவர் சர்புதீன் தலைமை வகித்தார். செயலாளர் முகைதீன் மீரான், பொருளாளர் முகமதுமுஸ்தபா, துணைத் தலைவர் ஹபிபுல்லா, இணைத் தலைவர் கபீப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக 400 ஏழை இஸ்லாமிய குடும்பத்தினருக்கு ஈகை திருநாள் உதவிகள் வழங்கப்பட்டன.
பழனிசெட்டிபட்டி முஸ்லீம் ஜமாத் கமிட்டி சார்பில், பள்ளிவாசலில் இருந்து பழனிசெட்டிபட்டி பஸ் ஸ்டாண்ட் வரை ஊர்வலம் நடந்தது. கமிட்டித் தலைவர் குலாம் தலைமை வகித்தார். பொருளாளர் மஸ்தான, உதவித் துணைத் தலைவர் சர்புதீன், இணைத் தலைவர் சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக 70 முஸ்லீம் ஏழை குடும்பத்தினருக்கு ஈகை திருநாள் உதவிகள் வழங்கப்பட்டன.
முத்துத்தேவன்பட்டி முஸ்லீம் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் துவங்கிய ஊர்வலம் டாக்டர் அம்பேத்கர் தெரு, கம்பம் மெயின் ரோடு கடந்து ஊருக்குள் சென்று, மீண்டும் பள்ளிவாசல் வந்தடைந்தது. ஜமாத் தலைவர் முகம்மதுநஷீர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் அபுபக்கர் சித்திக், செயலாளர் அப்துல்காதர், பொருளாளர் பிலால் உள்ளிட்ட ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்ற சிறப்பு தொழுகை நடந்தது.
உத்தமபாளையம்: பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் தர்வேஷ்முகைதீன் தலைமையில் தேரடியில் இருந்து ரம்ஜான் ஊர்வலம் துவங்கியது. மெயின்ரோடு, கோட்டைமேடு, கிராமச் சாவடி, பைபாஸ் வழியாக ஊர்வலம் ஈத்கா மைதானத்தை அடைந்தது. ஜமாத் தலைவர் ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தவர்களின் பெயர்களை வாசித்து நன்றி கூறினார். பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மதார் மைதீன் உலபி சிறப்பு பிரார்த்தனையை நடத்தினார். சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
கம்பம் : கம்பத்தில் உள்ள 12 பள்ளிவாசல்களில் இருந்து இஸ்லாமியர்கள் ஊர்வலமாக வந்து வாவேர் பள்ளிவாசலில் கூடினர். பின் அங்கிருந்து வாவேர் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் ஜெயினுலாப்தீன் தலைமையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஊர்வலமாக புறப்பட்டு ஒடைக்கரை வீதி, மெயின் ரோடு, காந்தி சிலை, ரேஞ்சர் ஆபீஸ் அருகில் உள்ள ஈத்கா மைதானத்தில் கூடினர். வாவேர் பள்ளிவாசல் தலைமை இமாம் அலாவுதீன் மிஸ்பாகி சிறப்பு தொழுகையை நடத்தினார். ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை பரிமாறினர்.
சின்னமனூர் : சின்னமனூர் பெரிய பள்ளிவாசலில் தலைமை இமாம் ஆதம் ரஷாதி தலைமையில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. மௌலவி ஷேக் தாவூத் தலைமையில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் தொழுகை நடைபெற்றது. திரளாக இஸ்லாமியர்கள் பங்கேற்றனர் தொழுகை முடிந்த பின் நகரின் முக்கிய வீதிகள் வழியாக தக்பீர் முழங்கி ஊர்வலம் சென்றனர்.
பெரியகுளம்: இஸ்லாமியர்கள் நேற்று புத்தாடை அணிந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். அழகர்சாமிபுரம் முகைதீன் பள்ளிவாசலில் துவங்கிய ஊர்வலம், வடகரை ஜாமியா மஸ்தித் பெரிய பள்ளிவாசல் வழியாக 13 க்கும் அதிகமான பள்ளிவாசலைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஊர்வலமாக சென்றனர். ஏராளமானோர் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.வடகரை பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் தலைமை வகித்தார். தென்கரை பள்ளிவாசல் துணை தலைவர் காதர் பிச்சை முன்னிலை வகித்தார். இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து அன்பை பகிர்ந்து கொண்டனர். தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கு விருந்து கொடுத்து மகிழ்ந்தனர்.
தேவதானப்பட்டி: பெரிய பள்ளிவாசல், அல் அமீன் பள்ளிவாசல், கெங்குவார்பட்டி, வினோபாநகர், ஜி.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி,எருமலைநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், மருகால்பட்டி உட்பட தாலுகாவில் 26 பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
போடி: புதூர் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை, தலைவர் தங்கப்பா தலைமையில் நடந்தது. இமாம் காதர் பாட்ஷா நூரி முன்னிலை வகித்தார். தொழுகையை ஒட்டி போடி புதுப்பள்ளி வாசலில் துவங்கி முந்தல் ரோடு வழியாக போடி புதூர் பெரிய பள்ளிவாசல் வரை இஸ்லாமியர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக சென்று பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தினர். டி.வி.கே.கே., நகர் பள்ளிவாசல் தலைவர் சையது அபுதாகீர், மேலத்தெரு பள்ளிவாசல் தலைவர் சர்புதீன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.