/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆடி வெள்ளியில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
/
ஆடி வெள்ளியில் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED : ஆக 09, 2025 03:55 AM

சுமங்கலிகள் காப்பு கட்டி வரலட்சுமி விரதம் துவக்கினர்
தேனி: ஆடி மூன்றாவது வெள்ளியில் வரலட்சுமி விரத நாளை முன்னிட்டு மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் நடந்த சிறப்பு வழிபாடுகளில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். திருமணமான பெண்கள் தங்கள் குடும்பத்தின் நலனுக்காக விரதம் இருந்து வரலட்சுமி பூஜை நடத்துவார்கள். இதற்காக சுமங்கலிகள் நோன்பு கயிறு கட்டினர் பூஜை துவக்கினர்.
வரலட்சுமி விரதத்தின் போது லட்சுமி தேவியை வழிபடுவதன் மூலம் செல்வத்தையும் செழிப்பையும் பெறுவார்கள் என்பதால், பெண்கள் அதிக அளவில் பூஜையில் கலந்து கொள்வார்கள்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி.,நகர் சிவ கணேச கந்தபெருமாள் கோயில், பெரியகுளம்ரோடு காளியம்மன் கோயில், பழைய டி.வி.எஸ்., ரோடு பத்ரகாளியம்மன் கோயில், வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள காமாட்சியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன.
விரதம் துவக்கிய சுமங்கலிகள்: ஆடி பவுர்ணமி வெள்ளிக்கிழமையில் சுமங்கலி பெண்கள் வரலட்சுமி நோன்பு மேற்கொள்வது வழக்கம்.
நேற்று வரலட்சுமி நோன்பைமுன்னிட்டு தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில் மூலவர், உற்ஸவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுமங்கலி பெண்கள், தங்களது கணவன்கள் தீர்க்க ஆயுளுடனும், அனைத்து செல்வங்களும் பெற்று குடும்பத்துடன்நலமுடன் வாழ காப்புக் கயிறு கட்டி விரதம் துவக்கினர்.
கூடலுார்: கூடலழகிய பெருமாள் கோயிலில் வரலட்சுமி சிறப்பு பூஜையை முன்னிட்டு மகாலட்சுமி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது.
பெண்கள் பஜனை பாடல்கள் பாடினர். குங்குமம், மஞ்சள் கயிறு, வளையல் வழங்கப்பட்டது. பொங்கல், பழச்சாறு பிரசாதமாக வழங்கப் பட்டது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், பால சித்தி விநாயகர் கோயில் வளாகத்தில் உள்ள துர்க்கை அம்மன், சுந்தரவேலவர் கோயிலில் உள்ள மகாலட்சுமி அம்மன், வடக்கு காளியம்மன் கோயில், துர்க்கை அம்மன் கோயில், செல்வ காளியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
தேவாரம்: பராசக்தி மாரியம்மன் கோயிலில் வெள்ளி கவச அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
போடி குலாலர்பாளையம் காளியம்மன் கோயிலில் சந்தன மாலை அலங்காரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டன.
போடி சுப்பிரமணியர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனுக்கும், போடி தாய் ஸ்தலம் ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில், போடி அருகே விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயில், போடி திருமலாபுரம் முத்து மாரியம்மன் கோயிலில் உள்ள அம்மனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.