/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆங்கில புத்தாண்டில் கோயில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
/
ஆங்கில புத்தாண்டில் கோயில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டில் கோயில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
ஆங்கில புத்தாண்டில் கோயில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்
ADDED : ஜன 02, 2026 05:42 AM

தேனி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில், அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிகள் சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோயில்களுக்கு காலை முதல் பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
கம்பம்: வேலப்பர் கோயிலில் முருகன் விபூதி அலங்காரத்தில் காட்சியளித்தார். கவுமாரியம்மன் கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில், யோகநரசிங்க பெருமாள் கோயில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில், லெட்சுமி நாராயண பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டன.
போடி: சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் நாராயணி,கார்த்திக் பட்டாச்சாரியார் உள்ளிட்டோர் செய்திருந்தார்.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானையுடன் சிறப்புஅலங்காரத்தில் காட்சியளித்தார். சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன், செயல் அலுவலர் சுந்தரி செய்திருந்தனர்.
போடி மேலச்சொக்கநாதர் கோயில், கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் உள்ள சிவன், போடி ஐயப்பன் கோயில், புதூர் சங்கடகர விநாயகர் கோயில், அக்ரஹாரம் பாலவிநாயகர் கோயிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆண்டிபட்டி:- ஜம்புலிப்புத்தூர் கதலிநரசிங்கப்பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி பூதேவியருடன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பரிவார தெய்வங்களான ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார், காலபைரவர், நவக்கிரக சுவாமிகளுக்கும் பூஜைகள் செய்து வழிபட்டனர். ஆண்டிபட்டி பால விநாயகர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில், காளியம்மன் கோயில், சக்கம்பட்டி முத்துமாரியம்மன், மேல விநாயகர், மங்கள விநாயகர், ராஜ விநாயகர், பகவதி அம்மன், நன்மை தருவார் ஐயப்பன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
பெரியகுளம்: பாலசுப்பிரமணியர் கோயில்,வரதராஜப் பெருமாள் கோவில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், கவுமாரியம்மன் கோயில், சங்க விநாயகர் கோயில், நாமத்வார் பிரார்த்தனை மையம், கைலாசபட்டி கைலாசநாதர் கோயில்,தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஜன.முதல் நாளில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவாலயங்களில் நந்தீஸ்வரர், சிவனுக்கு பிரதோஷம் பூஜை கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூடலுார்: சாய்பாபா கோயிலில் அபிஷேகம், சிறப்பு பூஜை, ஆரத்தி நடந்தது. புஷ்பாபிசேகம், தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். லோயர்கேம்ப் வழிவிடும் முருகன் கோயிலில் புத்தாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள் பாலித்தார். கூடலுார், கம்பம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, லோயர்கேம்ப் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்தினருடன் பூஜையில் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது.
கூடலுார் கூடல் சுந்தரவேலவர் கோயிலில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜை அபிஷேகம் ஆராதனை நடந்தது.

