/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேளாண் அலுவலர்களுக்கு 'ஸ்பைசஸ்' வாரியம் பயிற்சி
/
வேளாண் அலுவலர்களுக்கு 'ஸ்பைசஸ்' வாரியம் பயிற்சி
ADDED : ஜன 08, 2024 04:49 AM
கம்பம், : சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வாசனை திரவிய பொருள்கள் சாகுபடியில் ஏற்படும் தாக்கம், அவற்றை தடுப்பது பற்றி 'ஸ்பைசஸ்' வாரியம் தமிழக வேளாண், தோட்டக்கலை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கியது.
ஏலக்காய், மிளகு, கிராம்பு, பட்டை உள்ளிட்ட வாசனை திரவிய பொருள்கள் அதிக பரப்பளவில் கேரளாவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, போடிமெட்டு, மேகமலை, வடக்கு மலை, அகமலை உள்ளிட்ட பகுதிகளில் வாசனை திரவிய பொருள்கள் சாகுபடியாகின்றன. தேனி மாவட்ட விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் சாகுபடி செய்கின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள சீதோஷ்ண நிலை மாற்றம், அதனால் வாசனை திரவிய பொருள்களின் சாகுபடியில் ஏற்பட்டுள்ள தாக்கம், பூச்சி நோய் பாதிப்பு, அவற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து தேனி மாவட்ட வேளாண், தோட்டக்கலை அதிகாரிகளுக்கு போடி ஸ்பைசஸ் வாரியத்தின் உதவி இயக்குனர் (மார்க்கெட்டிங்) அலுவலகத்தில் பயிற்சி நடந்தது.
பயிற்சி முகாமிற்கு 'ஸ்பைசஸ்' வாரிய துணை இயக்குனர் சைமந்தா சைக்கியா தலைமை வகித்தார். சீதோஷ்ண நிலை மாற்றத்தால் வாசனை திரவிய பொருள்கள் சாகுபடியில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து டாக்டர் முருகன் முத்துச்சாமி, ஏலக்காய், மிளகு சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் தாக்குதல், கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி மயிலாடும்பாறை இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி தனபால் பேசினார்.
முகாமில் தேனி மாவட்டத்தை சேர்ந்த வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிக துறைகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.