ADDED : பிப் 22, 2024 06:07 AM

சின்னமனுார் : தேனி மாவட்டம் சின்னமனுாரில் நடந்த மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் பாரம்பரிய ரகமான கருப்பு கவுனி திறன் பரிசோதனை நடந்தது.
வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறை சார்பில் பயிர் விளைச்சல் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. மாநில அளவில் நடத்தப்படும் இப்போட்டியில் ஒவ்வொரு பயிருக்கும் மூன்று பரிசுகள் வழங்கப்படும். வேளாண் துறை சார்பில் நெல், கரும்பு, பயறு வகைகள் போன்ற சாகுபடி விவசாயிகள் இப்போட்டியில் பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு முதன் முதலாக இப்போட்டியில் பாரம்பரிய ரக நெல் பங்கேற்றுள்ளது.
சின்னமனுார் வட்டாரத்தில் மலையடிவார கிராமமான பொட்டிப் புரத்தில் 22 எக்டேரில் கருப்பு கவுனி, பூங்காரு, தூயமல்லி, 60ம் குறுவை உள்ளிட்ட பல பாரம்பரிய ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. அதில் விவசாயி சிவக்குமாரின் தோட்டத்தில் இறவை பாசன முறையில் சாகுபடி செய்துள்ள கருப்பு கவுனி நெல் ரகம் அறுவடை செய்து பார்க்கப்பட்டது. 50 சென்ட் நிலத்தில் விளைந்த கதிர்களை அறுத்து, நெற்கதிர், நெல்மணிகள் திறன் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ரகத்தின் சாகுபடி காலம் 150 நாட்களாகும்.
இப்பயிர் விளைச்சல் போட்டிக்கு நடுவராக விருதுநகர் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மோகன்தாஸ், தேனி துணை இயக்குனர் தேன்மொழி, உதவி இயக்குனர் திலகர் பங்கேற்றனர்.
போட்டி ஏற்பாடுகளை சின்னமனூர் உதவி இயக்குநர் பாண்டி உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் செய்திருந்தனர். போட்டியின் முடிவுகளை மாநில வேளாண் இயக்குனரகம் விரைவில் அறிவிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.