/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோடு அமைக்காததால் சகதிக்காடாக மாறிய தெருக்கள் பழையகோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
/
ரோடு அமைக்காததால் சகதிக்காடாக மாறிய தெருக்கள் பழையகோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ரோடு அமைக்காததால் சகதிக்காடாக மாறிய தெருக்கள் பழையகோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ரோடு அமைக்காததால் சகதிக்காடாக மாறிய தெருக்கள் பழையகோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதியின்றி தவிப்பு
ADDED : நவ 23, 2025 03:55 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சியில் தெருக்களில் சிமென்ட் ரோடு வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி சகதிகாடாக மாறியதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
இந்த ஊராட்சியில் பழையகோட்டை, சிவலிங்கம்பட்டி ஆகிய கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் குடிநீர் விநியோகம் உள்ளது. கூடுதல் தேவைக்கு போர்வெல் நீரை பயன்படுத்துகின்றனர். தொழில் வாய்ப்பு ஏதும் இன்றி விவசாயம், கால்நடை வளர்ப்பை மட்டுமே நம்பி உள்ள கிராமங்களில் ரோடு, தெருவிளக்கு, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவு இல்லை. பாலக்கோம்பை கூட்டு குடிநீர் திட்டத்தின் கடைசி கிராமங்களாக உள்ளதால் முழு அளவில் குடிநீர் வருவதில்லை. கிடைக்கும் குடிநீருடன் உவர்ப்பு நீரை கலந்து விநியோகிக்கின்றனர். அந்த குடிநீரும் போதுமானதாக இல்லை.
இப்பகுதி மக்கள் கூறியதாவது:
ஓடையை பாதையாக பயன்படுத்தும் அவலம் பால்ராஜ், பழையகோட்டை: இக் கிராமத்தின் பஸ் ஸ்டாப்பில் இருந்து பிங்கிகுளம் வரை பல ஆண்டுகளுக்கு முன்பு மெட்டல் ரோடு அமைக்கப்பட்டது. விவசாயிகள் விளைபொருட்களை எளிதில் வாகனங்களில் கொண்டு சென்றனர். தற்போது ரோடு முழுமையாக சேதம் அடைந்திருப்பதுடன் பெருமளவு ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் தற்போது ஓடையை நடைபாதையாக பயன்படுத்துகின்றனர். மழைக்காலத்தில் ஓடை வழியாக செல்ல முடியாது. ஏற்கனவே இருந்த ரோட்டை அளவீடு செய்து மீண்டும் புதுப்பித்து தர ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். சுடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லை. போர்வெல், தண்ணீர்தொட்டி அமைக்க வேண்டும்.
சேத மடை ந்த பெண்கள் கழிப்பறை பழனிச்சாமி, பழையகோட்டை: பிங்கி குளம், பள்ளன் குளம் அருகே புதுக்காடு வரை செல்லும் ரோட்டில் ஓரங்களில் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இப் பகுதியில் 600 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் அமைக்க விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை. பெரிய பாலம் அருகே உள்ள பெண்கள் பொதுக்கழிப்பறை சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனை பயன்படுத்தவும் முடியவில்லை. பொதுக்கழிப்பறையை இடித்து விட்டு ஆண்கள், பெண்களுக்கு புதிதாக நவீன கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப் பகுதியில் மா விளைச்சல் அதிகம் உள்ளது.
மலை க்கரட்டில் இருந்து தலைச்சுமையாக விளை பொருட்களை கொண்டுவரும் விவசாயிகளின் நலன் கருதி அப்பகுதியில் போர்வெல் அமைத்து தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும். தண்ணீர் தொட்டி அமைப்பதால் மேய்ச்சலுக்கு சென்று வரும் கால்நடைகளின் தண்ணீர் தேவையும் பூர்த்தி ஆகும்.
கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேடு காளிமுத்து, சிவலிங்கம்பட்டி: பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தினமும் தண்ணீர் கிடைப்பதில்லை. குடிநீர் விநியோகத்திற்கான போர்வெல் பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்யவில்லை. வடிகால் வசதி இல்லாததால் மழை நீர், கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது. சில மாதத்திற்கு முன்பு வடிகால் அமைக்க சர்வே செய்து பணிகள் கிடப்பில் உள்ளது. அனைத்து தெருக்களிலும் சிமென்ட் தளம் அமைத்து வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருவிளக்குகள் எரியாததால் இரவில் கிராமத்தின் பல பகுதிகள் இருளில் மூழ்கி விடுகிறது. பொதுக்கழிப்பறை வசதி இல்லாததால் திறந்தவெளி கழிப்பிடங்களை இப்பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றார்.

