/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள் பரிவட்டம் கட்டி வரவேற்பு
/
பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள் பரிவட்டம் கட்டி வரவேற்பு
பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள் பரிவட்டம் கட்டி வரவேற்பு
பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்த மாணவர்கள் பரிவட்டம் கட்டி வரவேற்பு
ADDED : ஜூன் 03, 2025 12:52 AM

தேனி: பள்ளிகள் திறப்பு நாளான நேற்று மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். பாலார்பட்டியில் மாணவர்களுக்கு பரிவட்டம் கட்டி ஆசிரியர்கள் அன்புடன் வரவேற்றனர்.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. மாணவர்கள் பெற்றோர்களுடன் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் பள்ளிகளுக்கு வந்தனர்.
சில பள்ளி நிர்வாகங்கள் சார்பில் மாணவர்களை வரவேற்பதற்காக, பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பாலார்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளியில் முதல் வகுப்பு மாணவர்களுக்கு பரிவட்டம் கட்டி மேளதாள வாத்தியங்களுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
பள்ளியில் பூரண கும்ப மரியாதை அளித்து, மலர் துாவி வகுப்பறைகளுக்கு அழைத்து சென்றனர். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் ஜோஸ்பின்ராணி தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தேனி நகர் பகுதியில் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் வகுப்புகள் துவங்கும் முன் சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாணவர்கள் வகுப்பறைக்கு சென்றனர்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் புத்தகங்கள், நோட்டுகள், உபகரணங்கள் வழங்கப்பட்டன.
கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு உபகரணங்களை வழங்கினார்.
சி.இ.ஓ., இந்திராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள 626 அரசு, அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 50 ஆயிரத்து 642 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், புத்தகப்பை, சீருடைகள் வழங்கப்பட்டு உள்ளன.
மேலும் 146 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 70 ஆயிரத்து 424 மாணவர்களுக்கு புத்தகங்கள், 37 ஆயிரத்து 584 பேருக்கு சீருடைகள் வழங்கப்பட்டன.
சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் 56,814 பேருக்கும் கூடுதல் சீருடைகள் வழங்கப்பட்டன.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி துவக்கப் பள்ளியில் நடந்த பள்ளி திறப்பு நாள் நிகழ்ச்சிக்கு உறவின் முறைத் தலைவர் தர்மராஜன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் ஜீவகன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
பள்ளித் தலைமை ஆசிரியை காஞ்சனாதேவி வரவேற்றார். ஆட்சிமன்ற குழு உறுப்பினர் சவுந்திரபாண்டியன் தேசிய கொடி ஏற்றினார். ஏராளமானோர் பங்கேற்றனர்.