/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடிந்து விழும் அபாயத்தில் துணை சுகாதார நிலையம் தர்மத்துப்பட்டியில் அடிப்படை வசதி இன்றி மக்கள் சிரமம்
/
இடிந்து விழும் அபாயத்தில் துணை சுகாதார நிலையம் தர்மத்துப்பட்டியில் அடிப்படை வசதி இன்றி மக்கள் சிரமம்
இடிந்து விழும் அபாயத்தில் துணை சுகாதார நிலையம் தர்மத்துப்பட்டியில் அடிப்படை வசதி இன்றி மக்கள் சிரமம்
இடிந்து விழும் அபாயத்தில் துணை சுகாதார நிலையம் தர்மத்துப்பட்டியில் அடிப்படை வசதி இன்றி மக்கள் சிரமம்
ADDED : செப் 16, 2025 04:57 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஒன்றியம், புள்ளிமான்கோம்பை ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஊராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த ஊராட்சியில் தர்மத்துப்பட்டி, நடுக்கோட்டை, குண்டலப்பட்டி, பி.புதூர், புள்ளிமான்கோம்பை, மூணாண்டிபட்டி, தாதனூர், கொட்டோடைபட்டி, தேவர் காலனி, ராசப்பன்கோட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. பெரிய கிராமமான தர்மத்துப்பட்டியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
கிராமத்தில் குடிநீர் வினியோகத்தில் தன்னிறைவு கிடைத்தாலும் வடிகால், கழிப்பறை, தெருக்களில் சிமென்ட் ரோடு வசதி இல்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரம் செயல்பட்டாலும் போதுமான டாக்டர்கள் பணியாளர்கள் இல்லை.
இதே பகுதியில் செயல்படும் துணை சுகாதார நிலையம் இடிந்து விழும் நிலையில் புதிய கட்டடம் கட்டவில்லை.
தற்போது மாற்று ஏற்பாடாக சேதம் அடைந்த ஊராட்சி அலுவலக கட்டடத்தில் துணை சுகாதார நிலையம் செயல்படுகிறது. மருத்துவ ஆலோசனை களுக்கு வரும் நோயாளிகள் இங்கு உட்கார இட வசதி இல்லை. கிராமத்தின் தேவைகள் குறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது:
கால்நடை கிளை நிலையம் இன்றி சிரமம் ரெங்கராஜ், தர்மத்துப்பட்டி: சுடுகாடு செல்லும் வழியில் ஒதுக்குப்புறமான இடத்தில் பல ஆண்டு களுக்கு முன் கட்டப்பட்ட பெண்கள் கழிப்பறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இரவில் இப்பகுதிக்குச்செல்ல போதுமான தெருவிளக்கு வசதி இல்லை. இங்குள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. கால்நடைகளுக்கு சிகிச்சை பெற கிளை நிலையம் இங்கு இல்லை.
நோய் பாதிப்புக்குள்ளான கால்நடைகளை 8 கி.மீ.,தூரம் உள்ள டி.சுப்புலாபுரம் அல்லது 10 கி.மீ., தூரம் உள்ள ஆண்டிபட்டிக்கு கால்நடைகளை கொண்டு செல்ல முடியவில்லை. இப்பகுதியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
ஊராட்சி நிர்வாகத்தினர் இப்ப பிரச்னை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலீஸ் புறக்காவல் நிலையம் தேவை கருத்தப்பாண்டி, தர்மத்துப்பட்டி: அதிக மக்கள் தொகை இருந்தும் சமுதாயக்கூடம் இல்லை. மெயின் ரோட்டில் இருந்து ஒன்றரை கி.மீ., தூரம் உள்ள சுடுகாடு ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. சுடுகாடு புதர் மண்டியுள்ளது.
இறுதி சடங்கு செய்ய அமரும் வசதி ஏற்படுத்தவில்லை. ஆற்றை ஒட்டி உள்ள சுடுகாடு பகுதிக்கு தடுப்புச் சுவர் மற்றும் சுற்றுச்சுவர் அவசியம். குண்டும் குழியுமான தெருக்கள், சேதமடைந்த வடிகால் சீரமைப்புக்கு வழியில்லை.
17 கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் இங்குள்ள துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ ஆலோசனைக்கு வருகின்றனர். அவர்கள் உட்காருவதற்கு கூட அங்கு இருக்கை வசதிகள் இல்லை. தர்மத்துப்பட்டியில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.
ஆண்டிபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கட்டுப்பட்ட பல கிராமங்கள் 20 கி.மீ.,தூரத்துக்கு அப்பால் உள்ளது. இரு மாவட்டங்களின் இணைப்பு ரோடாக புள்ளிமான்கோம்பை ரோடு இருப்பதால் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகமாகிறது. இப்பகுதியில் அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைப்பது அவசியம். கடந்த காலங்களில் இப்பிரச்னை குறித்து கிராம சபை கூட்டங்களிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்னும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு தெரிவித்தனர்.