ADDED : ஜூன் 04, 2025 01:14 AM
போடி: போடி வட்டாரத்தில் குறுவை சாகுபடி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடியில் இயந்திர நடவிற்கு மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் முருகேசன் தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியதாவது: போடி வட்டாரத்தில் டெல்டா அல்லாத பகுதிகளுக்கு குறுவை சாகுபடி திட்டத்தின் கீழ் கூழையனூர், உப்புக்கோட்டை விவசாயிகளுக்கு இயந்திர நடவு செய்ய ஏக்கருக்கு ரூ.4000 மானியம் வழங்கப்படுகிறது. இயந்திர நடவு செய்வதன் மூலம் நாற்றுகளை சேதமாகமல் நடவு செய்வதை எளிதாக்குகிறது. சிம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கவும், பயிர் மகசூலை மேம்படுத்தி உற்பத்தி திறனையும் உறுதி செய்கிறது.
மேலும் உயர் ரக நெல் விதைகள், நெற்பயிருக்கு தேவையான நுண்ணுாட்ட உரங்களான இரும்பு, மக்னீசியம், துத்தநாகம், தாமிரம், குளோரின், போரான், மாலிப்டினம் கொண்ட நுண்ணூட்ட கலவையும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மண்ணின் வளத்தை அதிகப்படுத்த உயிர் உரங்களான அசோஸ்பைரிலம், பாஸ்போ பாக்டீரியா, திரவ உயிர் உரமும் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயன் அடையுமாறு போடி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்து உள்ளார்.